For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

08:15 PM Jun 07, 2025 IST | Murugesan M
அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி   3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இன்றி 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் ஊராட்சியில் வெள்ளம் பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

Advertisement

இந்த பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அரசு செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை கடுமையாகச் சரிந்துள்ளது.

கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்குப் பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர்.

Advertisement

இதனால் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி கட்டடம் பழுதடைந்து விட்டதால் அருகிலிருக்கும் நூலக கட்டடமே பள்ளியின் வகுப்பறையாகச் செயல்பட்டு வருகிறது. எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் கிராமத்தில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள தனியார்ப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளியில் ஒரு மாணவி மட்டுமே படித்து வந்த நிலையில் தற்போது இரண்டு பேர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.

புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டும் திறக்கப்படாததால், நூலகத்திலேயே மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர் பள்ளியில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும் பள்ளி வளாகம் புதர் மண்டி காட்சியளிப்பதாலும், பள்ளிக்குச் செல்லும் வழியில் மின்கம்பங்கள் தாழ்வாக உள்ளதாலும் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், போதிய ஆசிரியர்களை நியமிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி, உரியத் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement
Tags :
Advertisement