For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அடையாளத்தை இழக்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

06:05 AM Jun 25, 2025 IST | Murugesan M
அடையாளத்தை இழக்கும் அண்ணா பல்கலைக்கழகம்

நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஒன்றாகவும் தமிழகத்தில் தனித்துவமிக்கதாக திகழ்ந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அதன் அடையாளத்தை படிப்படியாக இழந்துவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது. தரப்பட்டியலில் 465-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உயர்கல்வியில் பொறியியல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பயன்பாட்டு அறிவியல் ஆகிய பாடங்களைக் கற்றுத்தருவதிலும், மேல்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான எதிர்காலத்தைச் சிறப்பாக வடிவமைப்பதிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு அளப்பரியது.

Advertisement

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பெருமை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உண்டு.

தொழில்துறை சார்ந்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு அடிப்படையாக இருந்து தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஒன்றாகத் திகழ்ந்து வந்த அண்ணா பல்கலைக்கழகம் படிப்படியாக தன் தனித்துவத்தை இழந்து வருகிறது.

Advertisement

QS என்ற சர்வதேச அமைப்பு ஆண்டுதோறும் பட்டியலிடும் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் இந்திய அளவில் 54 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கடந்த ஆண்டு 383வது இடத்திலிருந்த அண்ணா பல்கலைக்கழகம் 82 இடங்கள் பின் தங்கி 465 இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த பின்னடைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் துணைவேந்தர் இல்லாமல் இருப்பதே பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த வேல்ராஜின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் தற்போது வரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாத காரணத்தினால் அப்பல்கலைக்கழகத்தில் அன்றாட பணிகள் தொடங்கி மாணவர்களுக்குப் பட்டமளிப்பது வரை அனைத்து விதமான பணிகளும் முடங்கியிருக்கிறது.

இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளாகவே மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் அப்பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் மாணவிகள் வந்து தங்கிப் பயிலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவமும் அப்பல்கலைக்கழகத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இது தவிர்த்து பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு, நிதிப் பற்றாக்குறை என அடுத்தடுத்து எழுந்திருக்கும் புகார்களும் அண்ணா பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளும் வகையில் அமைந்திருக்கின்றன.

நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த பல்கலைக்கழகம் அதன் அடையாளத்தை படிப்படியாக இழந்துவருவது அங்குப் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இனியும் அலட்சியம் காட்டாமல் துணைவேந்தர் நியமனம், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் என பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகம் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

Advertisement
Tags :
Advertisement