For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

09:05 AM Jun 10, 2025 IST | Murugesan M
அதிகரிக்கும் ராணுவ வல்லமை   இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்

முதல் முறையாக, ரஃபேல்  போர் விமானம் பிரான்ஸுக்கு வெளியே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தங்களில்  (Dassault) டசால்ட் மற்றும் (Tata) டாடா நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இது, நாட்டின் விமான உற்பத்தித்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரான்ஸின் (Dassault) டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது தான் ரஃபேல் (Rafale) போர் விமானம். ரஃபேல் (Rafale) என்றால்  ‘பேரலை’ என்று பொருள்.  உண்மையிலேயே  ரஃபேல் (Rafale), காற்றில் பேரலையாக, எதிரிகளை அடித்துச் சுழற்றி எறியும் வல்லமை கொண்டது.

Advertisement

24 ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாகப் பயன்பாட்டுக்கு வந்த ரஃபேல் (Rafale), இன்று உலகின் மிகச் சிறந்த பல்முனைத் தாக்குதல் போர் விமானங்களில் முதலிடம் வகிக்கிறது.

ரஃபேல் என்பது வெறும் போர் விமானம் மட்டுமல்ல. இதுவொரு விண்வெளித் தொழில்நுட்ப அதிசயம். மிகவும் சக்திவாய்ந்த இரண்டு M88-2 எஞ்சின்கள்; 10 டன் எடையுள்ள ஆயுதங்களைச் சுமக்கும் திறன்; 50,000 அடி உயரத்தில் மணிக்கு 2,222 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல்; 3,700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை; 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரி விமானங்களைக் கண்டறியும் திறன் கொண்ட Active Electronically Scanned Array என்னும் மேம்பட்ட ரேடார் அமைப்பு;  ஒரே நேரத்தில் 40 இலக்குகளைக் கண்காணித்து, அவற்றில் 8 இலக்குகள் மீது துல்லியமான தாக்கும் திறன்; எதிரியின் ரேடார் மற்றும் ஏவுகணைகளிலிருந்து தப்பிக்கும் திறனான SPECTRA  Electronic Warfare; SCALP கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், MICA என்ற Air to Air ஏவுகணைகள், METEOR என்ற நீண்ட தூர Air to Air  ஏவுகணைகள் போன்ற பல்வேறு வகையான ஆயுதங்களைச் சுமக்கும் திறன்; என ரஃபேலின் அசாதாரண திறன்கள் நிறையவே உள்ளன.

Advertisement

MiG-21, MiG-27 போர் விமானங்களுக்கு மாற்றாக புதிய தலைமுறை போர் விமானங்களை இந்தியா தேடிக்கொண்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு நடந்த Medium Multi-Role Combat Aircraft ஒப்பந்த போட்டியில் ரஃபேல் விமானம் பங்கேற்றது.

நீண்ட பரிசோதனைகள் மற்றும்  பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டு, செப்டம்பரில்  சுமார் 59,000 கோடி ரூபாய் மதிப்பிலான 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா-பிரான்ஸுடன்  கையெழுத்திட்டது. தொடர்ந்து, 2020ம் ஆண்டு, ஜூலையில் முதல் தொகுப்பு ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. அப்போது இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரஃபேல் விமானங்களில், ஏற்கெனவே இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு அமைப்புகளுடன் இஸ்ரேலின் X-Guard போன்ற கூடுதல் தற்காப்பு அமைப்புகள்  பொருத்தப்பட்டுள்ளன. அதிகமான வெப்பக் காலங்களிலும்,  வெப்பமான காலநிலையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இமயமலை போன்ற மிக உயரமான பனிமலைகளுக்கு மேலேயும் செயல்படும் வகையில் ரஃபேல்  எஞ்சின்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் ரஃபேல் போர் விமான உடற்பகுதியை தயாரிப்பதற்காக நான்கு உற்பத்தி பரிமாற்ற ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகி உள்ளன. போர் விமானத்தின் உடற்பகுதிகள் பிரான்ஸு க்கு வெளியே தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதற்காக, ஹைதராபாத்தில் ஒரு அதிநவீன உற்பத்தி நிலையத்தை டாடா நிறுவனம் அமைத்துள்ளது. பின்புற  ரஃபேல் போர் விமானத்தின் உடற்பகுதியின் பக்கவாட்டு ஓடுகள், முழுமையான பின்புறப் பகுதி, மைய உடற்பகுதி மற்றும் முன் பகுதி ஆகியவை உற்பத்தி செய்யப் பட உள்ளன.

முதல் விமான உடற்பகுதிப் பிரிவுகள் இன்னும் 3 ஆண்டுகளில்  உற்பத்தி செய்யப்படும் என்றும், அதற்குப் பின் மாதத்துக்கு இரண்டு முழுமையான விமான உடற்பகுதிகள் தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, இந்தியக் கப்பல் படைக்காக, 63,000 கோடி ரூபாய் மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வான், தரை மற்றும் கடல் எல்லைகள் இப்போது மேலும் பாதுகாப்பானவையாக உள்ளன. ரஃபேல் போர் விமானங்கள் முப்படைகளின் பலத்தைப் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

சீனா, பாகிஸ்தான், வங்க தேச எல்லைகளில் ஏற்படும் போர் பதற்றங்களைச் சமாளிப்பதற்கான இந்தியாவின் இராணுவ வல்லமை மேம்பட்டுள்ளதாக இராணுவத் துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement