For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

08:00 PM Jul 07, 2025 IST | Murugesan M
அதிர்ச்சியூட்டும் rti    சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. சிசிடிவி கேமிராக்கள் இல்லாததே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணமாகக் கூறப்படும் நிலையில்,  அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 லாக்கப் மரணங்கள் அரங்கேறியுள்ளன. விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுபோன்ற காவல் மரணங்கள் நிகழக்கூடாது என்பதற்காகக் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காவல்நிலையங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மொத்தமாக 25 காவல்நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் 20 காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவையைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி மீது காவல்நிலையத்தில் ஆய்வாளரை தரக்குறைவாக பேசி அராஜகமாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தான் அத்துமீறியதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள் எனக் கோரிய போது போலீசார் மறுத்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகக் காவல்நிலையங்களில் இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் தொடர்பாக அறிந்து கொள்ள தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் பெரும்பாலான காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்களே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கோவை மாவட்ட காவல்நிலையங்கள் மீது புகார் எழுந்துள்ளன. காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லாததே காவலர்களின் அத்துமீறலுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படும் நிலையில், காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement