For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

07:45 PM Jun 05, 2025 IST | Murugesan M
அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து   விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்

நெல்லை மாநகரப்பகுதிகளில் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களால் இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய பேருந்துகள் அச்ச உணர்வுடனேயே பயணிக்கும் பயணிகள் குறித்தும், தனியார் பேருந்துகளுக்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

திருநெல்வேலி மாநகராட்சி என்பது  டவுனில் தொடங்கி பாளையங்கோட்டை, மகாராஜா நகர் வரை பரந்து விரிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கியதாகும். நீண்ட நெடிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி ஏராளமான தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

Advertisement

பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலைக்குச் செல்வோர் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். அத்தகைய தனியார் பேருந்துகள் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களை வைத்து இயக்கப்படுவது அதில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தனியார் பேருந்துகளை இயக்கும் அனுபவமற்ற ஓட்டுநர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிவேகத்துடன் பேருந்துகளை இயக்குவதாகவும், சக பேருந்துகளை முந்திச் செல்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அவசரத்தில் பேருந்து நிலையங்களைப் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதும், பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே பேருந்துகளை இயக்குவதும் அதில் பயணிக்கும் பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

பேருந்துகளை இயக்குவதற்கு வகுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைத் துளியளவும் பின்பற்றாத ஓட்டுநர்கள் மீதும், அதனைத் தடுக்க தவறிய நடத்துனர்கள் மீதும் பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கு முன் அனுபவமற்ற ஓட்டுநர்களையும், நடத்துனர்களையும் நியமிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் பொதுமக்கள், தனியார் பேருந்துகளைக் குழு அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement