For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் தூதுக்குழு!

08:13 PM Jun 09, 2025 IST | Murugesan M
அமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் தூதுக்குழு

அமெரிக்காவில் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு அவமானத்தைச் சந்தித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாகிஸ்தானில்  மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.

பாகிஸ்தான் மன்றாடிக் கேட்டுக் கொண்டதற்காக, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்த இந்தியா, பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்தது.

Advertisement

மேலும், பயங்கரவாத பாகிஸ்தானின் உண்மை முகத்தைச் சர்வதேச நாடுகளுக்கு ஆதாரத்துடன் விளக்கும் வகையில், மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்களை 33 நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.

இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கையைப் பார்த்த பாகிஸ்தான், தானும் 2 குழுக்களை 5 நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தலைமையிலான இந்தியக் குழு, அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸை சந்தித்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளுக்குமான ஒத்துழைப்பு பற்றி விவாதித்தது.

Advertisement

அதனைத் தொடர்ந்து, முக்கிய அமெரிக்கச் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்த  இந்தியத் தூதுக்குழு, பயங்கரவாதத்துக்கு எதிரான  இந்தியாவின் நிலைப்பாடு குறித்து  விளக்கியது. இந்தியக் குழு அமெரிக்காவில் இருக்கும் அதே நேரத்தில், பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழுவும் அமெரிக்காவில் இருந்தது.

அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் பிராட் ஷெர்மன், பாகிஸ்தான் தூதுக் குழுவுக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். 2002ஆம் ஆண்டு அமெரிக்கப் பத்திரிகையாளர் Daniel Pearl,  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய  பிராட் ஷெர்மன்,  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை  ஒழிக்கவும், பயங்கரவாதத்தைத் தடுக்கவும் பாகிஸ்தான் முன்வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் தூதுக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அல்கொய்தா தலைவரும், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஒசாமா பின்லேடனுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருந்தது.  பின்லேடனை கண்டு பிடிக்கும் ரகசிய பணியில் ஈடுபட்டிருந்த CIA வுக்கு, Dr Shakil Afridi உதவினார்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பின்லேடனின் குடும்பத்திலிருந்து டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிக்க ஒரு ரகசிய போலியோ தடுப்பூசி திட்டத்தை Dr Shakil Afridi நடத்திக் கொடுத்தார்.    2011 ஆம் ஆண்டு, அபோட்டாபாத்தில் பின்லேடனின் வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. சோதனை நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட  Dr Shakil Afridiக்கு, அதற்கு அடுத்த ஆண்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்க Dr Shakil Afridiயை விடுதலை செய்யப் பாகிஸ்தான் அரசை வலியுறுத்துமாறு பிராட் ஷெர்மன், பாகிஸ்தான் தூதுக் குழுவிடம் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், மற்றும் அகமதியா முஸ்லிம்கள் உள்ளிட்ட    சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் குறித்தும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார் ஷெர்மன்.

மேலும் பாகிஸ்தானில், மத சிறுபான்மை மக்கள், தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றவும், ஜனநாயக அமைப்பில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தங்கள் தரப்பு  நியாயம் குறித்து எடுத்துரைக்கவும், இந்தியாவால் நிறுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற  முயற்சித்த பாகிஸ்தான் தூதுக் குழுவை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்மன், தர்ம சங்கடத்தில் தள்ளி உள்ளார்.

இதற்கிடையே,  பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயங்கரவாத தலைமையகம் நிரந்தரமாக மூடப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. ​​பாகிஸ்தானின் முக்கிய மாகாணமான பஞ்சாபில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையக கட்டடம், கூகுள் மேப்ஸ் லேபிளில் "நிரந்தரமாக மூடப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.

ஜாமியா மசூதி என்ற போர்வையில், (Markaz Subhan Allah camp) மர்காஸ் சுப்ஹான் அல்லா முகாம், பயங்கரவாதி மசூத் அசாரால் நிறுவப்பட்டது. பயங்கரவாதத்துக்கு ஆட்சேர்ப்பு, நிதி திரட்டுதல் மற்றும் மத போதனைக்காக இந்த முகாம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

சர்வதேச எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹாவல்பூரில் உள்ள இந்த முகாம், ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோட்டையாக செயல்பட்டு வந்தது. 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா  குண்டுவெடிப்பு ஆகியவை  இங்கே தான் திட்டமிடப்பட்டன.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்த இடமும் துல்லியமாகத் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூத் குடும்ப உறவினர்கள் 10 பேர் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். அந்த இடமே இடிந்து தரைமட்டமானது. தாக்குதல் நடத்தி 30 நாட்களுக்குப் பிறகு, இந்த மசூதி "நிரந்தரமாக மூடப்பட்டது" என்று கூகுள் மேப்ஸ் காட்டுகிறது.

Advertisement
Tags :
Advertisement