அமெரிக்காவில் ஆபத்தான கிருமியை பரப்பிய சீனாவைச் சேர்ந்த இருவர் கைது!
அமெரிக்காவில் ஆபத்தான கிருமியைப் பரப்பியதாகச் சீனாவைச் சேர்ந்த இருவரை அந்நாட்டுப் புலன் விசாரணை அமைப்பு கைது செய்துள்ளது.
உலக நாடுகள் மற்ற நாடுகள் மீது போர் தொடுக்கும் முறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், BIO WAR-ஐ சீனா தொடங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக நாடுகள் இதுவரை மீண்டு வராத நிலையில், தனது அடுத்த ஆட்டத்தைச் சீனா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் உணவுச்சங்கிலி மீது தாக்குதல் நடத்தும் விதமாக ஃபுசேரியம் கிராமினேரம் (Fusarium graminearum) என்ற ஆபத்தான கிருமியை அமெரிக்காவுக்கு அனுப்பியதாகச் சீனாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறிவியல் ஆய்வுகளின்படி ஃபுசேரியம் கிராமினேரம் பூஞ்சை, கோதுமை, பார்லி, மக்காச்சோளம், அரிசி ஆகிய பயிர்களில் நோய் தாக்குதலை ஏற்படுத்தும் என்றும், உலகளவில் பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுக்குக் காரணமாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த பூஞ்சை மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.