For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் : இந்தியாவின் உதவியை நாடும் சீனா!

06:05 AM Mar 13, 2025 IST | Murugesan M
அமெரிக்காவுடன் வர்த்தகப் போர்   இந்தியாவின் உதவியை  நாடும் சீனா

'பரஸ்பர வெற்றிக்காக' சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ( Wang Yi ) வாங் யி தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் நட்புணர்வுடன் கைகோர்த்தால் ​​சர்வதேச உறவுகளில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சமீபத்தில், லண்டனில் உள்ள (Chatham House) சாத்தம் ஹவுஸில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவுடன் நிலையான உறவுகளை இந்தியா விரும்புகிறது என்றும் எல்லையில் அமைதி இல்லாவிட்டால், அது இரு நாடுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்" என்றும் கூறியிருந்தார்.

Advertisement

இந்நிலையில், பெய்ஜிங்கில் நடைபெற்ற 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் மூன்றாவது அமர்வின் ஒரு பகுதியாக செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, சீனா இந்தியா இரு நாடுகளும் கூட்டாளிகளாக, ஒருவருக்கொருவர் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

எல்லைப் பிரச்சினைகள் ஒட்டுமொத்த உறவுகளைப் பாதிக்க விடக்கூடாது என்றும், இரு நாடுகளும் "டிராகன் மற்றும் யானையின் கூட்டு முயற்சியாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும், இணைந்து பணியாற்றுவதே இரு தரப்பினருக்கும் சரியான தேர்வாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement

இருநாடுகளுக்கும் இடையேயான 75 ஆண்டுகால உறவுகளை குறிக்கும் இந்த ஆண்டில், இந்தியா சீனா உறவில் இது ஒரு முக்கிய திருப்பமாகும். கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு ஒரு வெற்றிச் சந்திப்பாகும். அதன்பிறகே, இந்திய சீனா உறவில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

அதன்பின்னர், இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இருமுறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சீன வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து பேசியுள்ளார். கூடுதலாக, ஜனவரி மாதம் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீன வெளியுறவுச் செயலாளர் மற்றும் துணை அமைச்சருடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்தார்.

இதன் விளைவாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்கவும், இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை தொடங்கவும், சீனர்களுக்கு விசா வழங்கவும், கொள்கை அளவில் இருநாடுகளும் ஒப்பு கொண்டன. எல்லை பதற்றத்தைக் குறைக்கவும் இருநாடுகளும் நடவடிக்கை எடுத்தன.

சீனாவுடன் வர்த்தகப் போரை அமெரிக்க தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை இருமடங்கு அதிகரித்துள்ளார். பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 15 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது.மேலும், 25 அமெரிக்க நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கா போரை விரும்புகிறது என்றால், அது வர்த்தகப் போராக இருந்தாலும் சரி, வேறு வகையான போராக இருந்தாலும் சரி, இறுதிவரை போராட தயாராக உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுடனான போருக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில்தான் இந்தியாவின் உதவி சீனாவுக்குத் தேவைப்படுகிறது. எனவே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் லி, சீனாவும் இந்தியாவும் கைகோர்த்தால் உலகளவில் தெற்கிற்கான வாய்ப்பு மேம்படும் என கூறியுள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது, பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement