அமைச்சர் கே.என்.நேரு மீது ஸ்ரீரங்கம் எம்எல்ஏ குற்றச்சாட்டு!
தனது தொகுதிக்கு வந்த திட்டத்தை வேறு தொகுதிக்கு மாற்றியதாக அமைச்சர் கே.என்.நேரு மீது ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, தனது தொகுதிக்கு உட்பட்ட கண்ணுடையான்பட்டியில் சமுத்திர பாலம் கட்டுவதற்கு வந்த திட்டத்தை மண்ணச்சநல்லூர் பகுதிக்குக் கொடுத்துவிட்டதாகக் கூறினார்.
இதனால் அமைச்சர் கே.என்.நேரு மீது வருத்தம் உள்ளது என்றும், அந்தந்த தொகுதிக்கு என்ன திட்டம் வருகிறதோ அதைச் செய்யுங்கள், அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்காதீர்கள் எனவும் சட்டமன்ற திமுக உறுப்பினர் பழனியாண்டி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.