அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 - புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!
புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் தாக்கல் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் எனவும் சிவப்பு ரேஷன் அட்டைதார்களுக்கு தலா 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பட்ஜெட் உரையை படித்த முதலமைச்சர் ரங்கசாமி மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும். எனவும் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கான ஈமச்சடங்கு நிதி 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்ட அவர், சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கான மேம்பாட்டு நிதி 2 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.