அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படும் கொடைக்கானலில் சிட்டுக் குருவிகள் மிக வேகமாக குறைந்து வரும் நிலையில், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அப்பகுதி சூழலியல் ஆர்வலர்கள் கூறுவது, வனங்கள் அழிப்பு.
கொடைக்கானல் மலையை சுற்றி இருக்கும் ஏராளமான வனப்பகுதி படிப்படியாக அழிக்கப்பட்டு சொகுசு ரிசார்ட், தங்கும் விடுதிகளாக மாற்றப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் வனத்தில் உள்ள மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
விளை நிலங்கள் குறைவது, வனங்கள் அழிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால், கடந்த காலங்களில் 3 முதல் 4 முட்டைகளை இட்ட சிட்டுக்குருவிகள் தற்போது ஒன்று முதல் இரண்டு முட்டைகளை மட்டுமே வைப்பதாக அரசு கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்தாலே போதும், என்பது சற்றே ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. போதுமான உணவும், நீரும் கிடைத்தாலே சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை உயரும் என்பது அரசு கால்நடைத்துறையினரின் கருத்தாக உள்ளது.
காக்கா, குருவி எங்கள் ஜாதி என பாரதியால் பாடப் பெற்ற பறவைகளில் ஒன்றான குருவி இனம் விரைவில் பல்கிப் பெருக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.