For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அழ வைத்து சென்ற "அல்லி அர்ஜுனா" - சிறப்பு தொகுப்பு!

07:35 PM Mar 26, 2025 IST | Ramamoorthy S
அழ வைத்து சென்ற  அல்லி அர்ஜுனா    சிறப்பு தொகுப்பு

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல்நலக் குறைவால் காலமான சம்பவம் திரையுலக ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனரின் மகனாக இருந்தாலும் தனக்கென தனி அடையாளத்தோடு திகழ்ந்த மனோஜ் குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

திரையுலகில் பலரையும் அறிமுகப்படுத்தி அரிதாரம் பூச வைத்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு தனது மகனையும் நடிக்க வைக்க வேண்டும் என்பதே ஆசை..... தாஜ்மஹால் என்ற தலைப்பிட்டு அவர் உருவாக்கி, மகனை கதாநாயகனாக நடிக்க வைத்த படத்தில், திருப்பாச்சி அரிவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா என்று சீறியிருப்பார் மனோஜ்.

Advertisement

இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஈச்சி எலுமிச்சி என்ற பாடலையும் தனது குரலில் பாடியிருந்தார்.

தந்தையைப் போல் சிறந்த திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பதே மனோஜின் விருப்பம். இதனால் இயக்குனர் மணிரத்னத்திடமும் உதவியாளராக இருந்தார். தனது பெயரை கூட சில நாட்களுக்கு மணிரத்னம், பாரதிராஜா பெயர்கள் இடம்பெறும்படி மணிபாரதி என்றே வைத்திருந்தார். ஆனால் காலம் அவரை அரிதாரம் பூசவே அழைத்து வந்திருந்தது.

Advertisement

தாஜ்மஹாலை போலவே தந்தை இயக்கிய கடல் பூக்கள் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனோடு சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், மகா நடிகன், மாநாடு, விருமன் என திரைப்படங்களில் நடித்த மனோஜ், கொடுத்த வேடங்களில் தனது முத்திரையை பதித்தார்.

ஆனாலும் இயக்குனர் ஆசை மனோஜை விடவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

கேரள திரைப்பட நடிகை நந்தனாவும் மனோஜும் நண்பர்களாக இருந்த நிலையில் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஆர்த்திகா, மதிவதனி என இரு மகள்கள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜிக்கு ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சேத்துப்பட்டில் உள்ள தனது இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனோஜ் உயிரிழந்தார்.

மனோஜின் மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தந்தை பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தை மீண்டும் தனது இயக்கத்தில் ரீமேக் செய்ய வேண்டும் என்பது மனோஜின் ஆசையாக இருந்தது. ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாத நிலையில் மனோஜின் அஞ்சலிக்காக வந்திருந்த மலர்களில் சிகப்பு ரோஜாக்களும் சோகத்துடன் காட்சியளித்தன.

Advertisement
Tags :
Advertisement