அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் "கிங்"ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!
அமெரிக்காவில் நடந்த ஒரு கண்காட்சி செஸ் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை செஸ் விளையாட்டு வீரரான ஹிகாரு நகமுரா செய்த செயல், செஸ் உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அப்படியென்ன செய்தார் அவர்? ஏன் அப்படி செய்தார்? யார் சொல்லி அவர் அப்படி நடந்து கொண்டார்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், 'செக்மேட்: யுஎஸ்ஏ vs இந்தியா' என்ற பெயரில் High-Voltage Chess Spectacle என்ற ஒரு கண்காட்சி செஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இளம் இந்திய செஸ் வீரரும் உலக சாம்பியனான குகேஷும், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவும் மோதினார்கள்.
10 நிமிட மற்றும் 5 நிமிட ரேபிட் பிரிவுகளில் நகாமுராவை டிராவில் நிறுத்தி ஆட்டத்தை முடித்தார் குகேஷ். இறுதி ஒரு நிமிட புல்லட் சுற்றில் 5-0 என்ற அளவில் இந்திய வீரர் குகேஷை நகாமுரா வீழ்த்தினார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும், வெற்றிப் பெற்றவர் தோற்ற வீரரிடம் கைக்கொடுத்து விடைபெறுவது தான் வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த மரபுக்கு எதிர்மாறாக ஆட்டத்தில் குகேஷுக்கு 'செக்மேட்' வைத்த நகமுரா, வெற்றியைக் கொண்டாடும் விதமாக, குகேஷின் கிங் காயினை எடுத்து, அங்கிருந்த ரசிகர் கூட்டத்தை நோக்கித் தூக்கி எறிந்தார்.
இதைப் பார்த்த உலக சாம்பியன் குகேஷ், ஒரு நொடி திகைத்து, அதிர்ச்சியுடன் புன்னகைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும் செஸ் உலகம் அதிர்ச்சிக்கு உள்ளானது. கொதித்துப் போன இந்திய செஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் செஸ் சாம்பியன்களும் இது குகேஷுக்கு நடந்த அவமரியாதை என்று செஸ் விளையாட்டுக்குத் தலைகுனிவு என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நகமுராவின் இந்தச் செயலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள முன்னாள் உலக சாம்பியனான ரஷ்யாவின் Vladimir Kramnik விளாடிமிர் கிராம்னிக், இது வெறும் அநாகரிகம் மட்டுமல்ல, நவீன செஸ் விளையாட்டின் சீரழிவுக்கான தெளிவான அறிகுறி," என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாகத் தனது மோசமான நடத்தைக்காக அறியப்பட்ட ஒரு வீரரை இப்படி விளம்பரப்படுத்துவது, செஸ் விளையாட்டை வேண்டுமென்றே சேதப்படுத்தும் செயல் என்று பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க செஸ் சாம்பியனான Wesley So வெஸ்லி சோ விமர்சித்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பே இது திட்டமிடப்பட்டது என்று தெரிவித்துள்ள அமெரிக்க செஸ் வீரர் நகாமுரா, புல்லட் சுற்றில் செக்மேட் வைத்துத் தோற்கடித்ததால், தான் செய்ததை ரசிகர்கள் வரவேற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஒரு entertainment element ஆக, தோற்றவரின் கிங் காயினை இப்படி தூக்கி ரசிகர்கள் மத்தியில் வீச வேண்டும் என்று போட்டியின் அமைப்பாளர்கள் தெரிவித்ததாக அமெரிக்க அணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு பிரபல வீரரான லெவி ரோஸ்மேன் கூறியுள்ளார்.
போட்டி முடிந்த பிறகு செஸ் காயினை துாக்கி எறிந்ததற்கானகாரணத்தைக் குகேஷிடம், நகமுரா விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. பார்வையாளர்களைக் கவரவே போட்டி ஏற்பாட்டாளர்களின் அறிவுறுத்தல் படி இவ்வாறு நடந்து கொண்டதாக நகமுரா கூறியுள்ளார்.
உண்மையில் இந்த கண்காட்சி போட்டியே. ஒரு சதுரங்கப் போட்டி நடக்கும் மரபையே மாற்றுவதற்காக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற செஸ் விளையாட்டு வீரர்கள், தங்கள் அணிக்கான பிரத்யேக ஜெர்சிகளுடன் WWE பாணி அறிவிப்புகளுக்கு மத்தியில் மேடையேறினார்கள்.
நடுவர் சீருடையில் போட்டியை மேற்பார்வையிடும் வகையில் மேடையில் இருந்த ஒருவர் வீரர்களை ஒவ்வொரு MOVEக்கும் ஆடம்பரமாகக் விளையாட்டை ரசித்து கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சொல்லப்போனால், இது, பாரம்பரிய செஸ் போட்டிகளுக்கான விதிகள் எதுவும் இல்லாமல் பொழுதுபோக்குக்கான கண்காட்சி போட்டியாகவே இது நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அடுத்து, இரண்டாவது சுற்று போட்டி இந்தியாவில் நடக்கும் போது, குகேஷ் இதற்குப் பதிலடி கொடுப்பார் என்றும் இந்திய செஸ் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.