For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சட்டவிரோதமாக குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

07:45 PM Jun 04, 2025 IST | Murugesan M
சட்டவிரோதமாக குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் இந்தியா உறுதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, சுமார் 2000க்கும் மேற்பட்டோர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேற முன்வந்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மேற்கு வங்கம், அசாம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்கள்.

Advertisement

ஒரு குடும்ப உறுப்பினர், பொதுவாக ஆண், முதலில் வேலைவாய்ப்புக்காக எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வருகிறார். தொடர்ந்து, வீட்டுவசதியைப் பெற்றபின் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக் கொள்கிறார்.

பெரும்பாலான சட்டவிரோத வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள் டெல்லியைச் சென்று சேர்வதற்கு முன், மேற்குவங்கத்தில் தங்கியிருந்தனர் என்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக,மேற்கு வங்கத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தவர், மேற்குவங்கத்தில் 43.2 சதவீதம், அசாமில் 16.3 சதவீதம், திரிபுராவில் 8.7 சதவீதம், ஜார்கண்டில் 11 சதவீதம், பீகாரில் 6.7 சதவீதம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 3.3 சதவீதம் என்ற அளவில் தங்கியுள்ளனர். இந்த மாநிலங்களில் இருந்து இறுதியாகத் தலைநகர் டெல்லிக்குக் குடியேறியுள்ளனர்.

தரகர்கள், முகவர்கள், உறவினர்கள் மற்றும் மத ரீதியிலான நண்பர்கள் மற்றும் இஸ்லாமிய மத போதகர்களின் நெட்வொர்க் மூலம், தற்காலிக வீடு மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்று விடுகின்றனர். பெரும்பாலோர் முறைசாரா துறையில் வேலை செய்து வருகிறார்கள்.

சட்டவிரோத குடியேற்ற சமூகத்தை இந்தியாவில் கட்டியெழுப்புவதில் ஈத் மற்றும் மொகரம் போன்ற மதப் பண்டிகைகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலமாகவே, பதிவு செய்யப்படாத அரசு சாரா நிறுவனங்கள், இஸ்லாமிய மத அமைப்புகள் மற்றும் ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவையும் சட்ட விரோத வங்க தேசத்தவர் எளிதில் பெற்றுவிடுகிறார்கள்.

மேலும், சீலம்பூர், ஜாமியா நகர், ஜாகிர் நகர், சுல்தான்புரி, முஸ்தபாபாத், ஜாஃப்ராபாத், துவாரகா மற்றும் கோவிந்த்புரி ஆகிய பகுதிகளில் அடர்த்தியான, நெரிசலான அங்கீகரிக்கப்படாத காலனிகள் உருவாகி விடுகின்றன.

சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு, நாடு கடத்தும் முயற்சிகளை மத்திய அரசு  எடுக்கும்போதெல்லாம், 'சிறுபான்மை வாக்கு வங்கி' அரசியல் ஆதரவு காரணமாக, சட்டவிரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை பெரும்பாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் எதிர்ப்பை சந்திக்கிறது.

இந்தச் சூழலில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த மத்திய அரசு, பாகிஸ்தான் குடிமக்களுக்கான அனைத்து வகை விசாக்களையும் ரத்து செய்தது.

அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் தங்கள் மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு, அவர்களை   உடனடியாக திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினரைக் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.  அடையாளம் காணப்பட்ட சட்ட விரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினர் நாடெங்கும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக, கடந்த மே 14 ஆம் தேதி, சுமார் 150 சட்டவிரோத வங்கதேசத்தவரை இந்தியா நாடு கடத்தியது.

இந்நிலையில், சட்ட விரோதமாகக் குடியேறிய 2000க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து  நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, இந்திய-வங்கதேச எல்லைக்கு வந்துள்ளனர்.  திரிபுரா, மேகாலயா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஆவணங்கள் சரிபார்ப்பு செயல்முறைகள் நடைபெறுகின்றன.

டெல்லி மற்றும் ஹரியானாவில் இருந்து அதிக அளவிலான சட்ட விரோத  வங்க தேசத்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இது போல, குஜராத், அசாம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களிலிருந்து IAF விமானங்கள் மூலம் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சட்ட விரோத  வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.  எல்லையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள அவர்களுக்கு, உணவு மற்றும் கொஞ்சம்  வங்கதேச பணமும் கொடுக்கப் பட்டுள்ளது.

சில மணிநேரத் தடுப்புக்காவலுக்குப் பின் தாய்நாட்டுக்குத்  திருப்பி அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நாடு கடத்தும் நடவடிக்கை இதுவரை சீராக நடைபெற்று வருவதாகவும், இந்திய அதிகாரிகளுக்கு வங்கதேச எல்லைக் காவல்படையினர் சுமூகமான ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு, சுமார் 2800 வங்கதேசத்தவர் நாடு கடத்தப் படும் நிலையில், வங்கதேச எல்லைக் காவல்படையினர் சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement