ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!
குறைந்த விலை தற்கொலை ட்ரோன்கள் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. குறைந்த நேரத்தில், குறித்த இலக்குகளைத் துல்லியமாக அழிப்பது, பொது சேதத்தைத் தவிர்ப்பது என்று புதிய போர் உத்திக்கான அளவுகோலாக இந்த ட்ரோன்கள் மாறியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7ம் தேதி, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இனிமேல் பாகிஸ்தானின் எந்தப் பகுதியும் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்க முடியாது என்ற செய்தியை இந்த ஆப்ரேஷன் சிந்தூர் உரக்கச் சொல்லியது.
(Scalp cruise missiles) ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ( HAMMER bombs) ஹேமர் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ( SkyStriker suicide drones ) ஸ்கைஸ்ட்ரைக்கர் தற்கொலை ட்ரோன்களால் மிகத் துல்லியமான தாக்குதலை இந்தியா நடத்தியது.
இஸ்ரேலுடன் சேர்ந்து பெங்களூருவின் ஆல்பா டிசைன் நிறுவனம் இந்த (SkyStriker) ஸ்கை ஸ்ட்ரைக்கரை உருவாக்கியுள்ளது. ஒரே ஒரு பணியாளரால் இயக்கக் கூடிய இந்த ட்ரோன்கள், குறைந்த பராமரிப்பு தேவை கொண்டதாகும்.
வெடிமருந்துகளுடன் அலைந்து திரியும் இந்த தற்கொலை ட்ரோன்கள் மின்னணு முறையில் வழிநடத்தப்படுகின்றன. ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் எனப்படும் இந்த ட்ரோன்கள் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டவையாகும்.10 பதுங்கு குழிகள் அல்லது ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தை நொடியில் அழிக்க போதுமான 10 கிலோ வரை வெடிமருந்துகளைச் செல்லும் ஆற்றல் படைத்ததாகும்.
கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் இந்த தற்கொலை ட்ரோன்கள், இலக்கை அடையாளம் கண்டு, ஊடுருவி வெடிக்கச் செய்து, முற்றிலுமாக அழித்து விடுகின்றன.
இத்தனை சிறப்புக்கள் கொண்ட இந்த ட்ரோனின் விலை, மரபுவழிப் போரில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு போர் ஜெட் விமானத்தின் விலையில் நூறில் ஒரு பங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிவைத்து, சீனா மற்றும் துருக்கியில் இருந்து வாங்கிய சுமார் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது. அவற்றை எல்லாம், ரஷ்யாவின் S -400 வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி, இந்தியா வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
தொடர்ந்து, ஹார்பி ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் லாகூர் உட்படப் பல விமானப்படைத் தளங்களையும் அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் ரேடார்களையும் இந்தியா அழித்தது .
ஹார்பி ட்ரோன் என்பது இஸ்ரேலிய விண்வெளித் தொழில்நுட்பத்தால் [Israeli-made unmanned aerial vehicle (UAV)] உருவாக்கப்பட்டதாகும். இந்த வான்வழி வாகனம் சுற்றித் திரியும் வெடிமருந்து எனப்படுகிறது.
இது, எதிரி நாட்டின் ரேடார் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிப்பதற்காகவே வடிவமைக்கப் பட்டதாகும். கண்காணிப்பு மற்றும் துல்லியமான தாக்குதல் இரண்டையும் திறம்படச் செய்யும் இந்த ஹார்பி ட்ரோன்கள் Fire and Forget Missile என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ட்ரோனின் வெவ்வேறு பதிப்புகள் 500 முதல் 1000 கி.மீ தூரத்தைக் கடக்கும் வகையில் வெவ்வேறு மாடல்களில் உருவாக்கப் பட்டுள்ளன. ஆறு முதல் ஒன்பது மணி நேரம் வரை வானில் பறக்கக் கூடிய திறன் பெற்ற இந்த ஹார்பி ட்ரோன்கள், சுமார் 32 கிலோ எடையுள்ள போர் ஆயுதங்களைச் சுமந்து பறக்கும் திறன் கொண்டதாகும்.
அதிகபட்சமாக மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த ட்ரோன்கள், தானாகவே எதிரியின் ரேடார் சிக்னல்களைக் கண்டறிந்து, உடனே தானாகவே தாக்கும் ஆற்றல் உடையதாகும். அதனாலேயே, இந்த ட்ரோன்கள் உலகின் மிக ஆபத்தான ட்ரோன்கள் என அழைக்கப்படுகிறது.
இப்படி, Harop, SkyStriker, ALS-50, Nagastra, kamikaze ஆகிய ட்ரோன்கள், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெறக் காரணமாக அமைந்துள்ளன. முன்னதாக, 2021ஆம் ஆண்டு, ட்ரோன் கொள்கையில் புதிய மாற்றத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தது.
குறிப்பாக, இறக்குமதி செய்யப்பட்ட ட்ரோன்கள் மீதான தடை உள்நாட்டு ட்ரோன் உற்பத்திக்கு வழிவகுத்தது. மேலும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தால், இந்தியா ட்ரோன் தயாரிப்பிலும் சாதனை படைத்துள்ளது. 2021-22 முதல் நிதியாண்டு 2023-24 வரை - மொத்தம் 120 கோடி ரூபாய் ஊக்கத்தொகை ட்ரோன் உற்பத்திக்காக அளிக்கப்பட்டுள்ளது.
ideaForge, Zen Technologies, DroneAcharya, Garuda Aerospace, Marut Drones உட்பட 487 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ட்ரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 136 இராணுவ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. உலகளாவிய ராணுவ ட்ரோன் சந்தையில் இந்தியாவின் பங்கு 3.8 சதவீதமாகும்.
இந்தியாவின் புதிய யுக பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் பல முதலீட்டாளர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவின் ட்ரோன் உற்பத்தி நிறுவனங்கள் இதுவரை, சுமார் 414 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டு, மொத்தம் 421.69 மில்லியன் டாலர் மதிப்புடைய சுமார் 2,500 ட்ரோன்கள் இந்தியக் கடற்படையில் சேர்க்கப் பட்டன. அமெரிக்காவின் 31 MQ-9B பிரிடேட்டர் ட்ரோன்களை 4 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
மொத்தத்தில், ட்ரோன் போர், வான் பாதுகாப்பு, மின்னணு போர் என எதுவாக இருந்தாலும், இந்திய இராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேறியுள்ளது என்பதற்குச் சான்றாக ஆப்ரேஷன் சிந்தூர் அமைந்துள்ளது.