ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!
பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டது உலக கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான்- ஆப்கான் எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோதல் வலுத்து வருகிறது. ஆப்கான் ஆதரவுடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, TTP தலிபான்கள் முகாம்கள்மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. எல்லை தாண்டிப் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுத்த ஆப்கான் இராணுவம், பல எல்லைச் சாவடிகளைக் கைப்பற்றியது.
பாகிஸ்தான் ராணுவம் வேண்டுகோளுக்கு இணங்க ஆப்கான் அரசு 48 மணி நேர நிறுத்தத்தை அறிவித்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில், 3 இளம் ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, முழு கிரிக்கெட் அணியையும் குறிவைத்து வேண்டுமென்றே பாகிஸ்தான் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தலிபான் அரசுக் குற்றம் சாட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தைத் தணிப்பதற்காகத் தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல், அமைதி முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதற்காக ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் தயாராகி வந்தனர்.
இந்நிலையில், உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்களும் பயிற்சி முடிந்து சொந்த ஊரான உர்குனுக்குத் திரும்பினர். அங்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, அவர்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில், உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த 5 சக உள்நாட்டு ஆப்கான் வீரர்களுடன் சேர்த்து 10 உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கான் கிரிக்கெட் வாரியம், துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் சோகமான மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. தற்போதைய டி20 கேப்டன் ரஷீத் கான், இந்தத் தாக்குதல், முற்றிலும் ஒழுக்கக்கேடான மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என்று கண்டித்துள்ளார்.
பாகிஸ்தான் அடக்குமுறையாளர்களால் அப்பாவி பொதுமக்களும், உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் படுகொலை செய்யப்பட்டது, ஒரு கொடூரமான, மன்னிக்க முடியாத குற்றம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் இந்தக் கொடூரத் தாக்குதல், பக்திகாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்று தனது வேதனையை முகமது நபி வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷித் கான் மற்றும் முகமது நபி போன்ற உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள், பாகிஸ்தானின் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கையைச் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளன. இந்தத் துயர சம்பவத்துக்குப் பதிலளிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நவம்பர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் இலங்கை மற்றும் ஆப்கான் முத்தரப்பு T20I தொடரைப் புறக்கணிப்பதாக ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வரும் ஜனவரியில் இலங்கையில் திட்டமிடப்பட்டு வரும் முத்தரப்பு தொடரையும் ஆப்கான் கிரிக்கெட் வாரியம் புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.