ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு - பிரதாப் ரெட்டி
பல நாடுகளிலிருந்தும் மக்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகாவிற்காக இந்தியாவைத் தேடி வருவதால், சென்னைக் கிரீம்ஸ் சாலை global destination-ஆக மாறியுள்ளதாக அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை நவீன மருத்துவத்துடன் இணைக்கும் வகையில், அப்போலோ மருத்துவ குழுமத்தின் புதிய ஆயுர்வேதச் சிறப்பு மருத்துவமனைச் சென்னை, கிரீம்ஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ளது.
அப்போலோ குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டி இந்தப் புதிய மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மனிதகுலத்திற்கு அளித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று ஆயுர்வேதம் என்றும், இதன்மூலம் நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறைகளின் சிறந்த அம்சங்களை அப்போலோ மருத்துவமனை ஒன்றிணைப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகத் துணை தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி, இந்த ஆயுர்வேத மருத்துவமனை மூலம், மருத்துவ ரீதியாக ஆயுர்வேதத்தை நவீன மருத்துவத்துடன் இணைப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி ஆகிய பகுதிகளில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளதாகவும், விரைவில் மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவிலும் ஆயுர்வேத மருத்துவமனைத் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆயுர்வேதத்தின் துல்லியத்தையும், அப்போலோ மருத்துவ அமைப்புகளின் அறிவியல் துல்லியத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராஜீவ் வாசுதேவன் தெரிவித்தார்.
முழுமையான சிகிச்சையை நாடும் ஒவ்வொருவருக்கும் உயர்தர, பாதுகாப்பான ஆயுர்வேதப் பராமரிப்பை அணுகக்கூடியதாக மாற்றுவதே தங்கள் குறிக்கோள் என்றும் ராஜீவ் வாசுதேவன் கூறியுள்ளார்.