ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP - சிறப்பு தொகுப்பு!
உணவே மருந்து என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திருச்சியில் இயங்கி வரும் மூலிகை சூப் கடைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இயற்கையான முறையில் தயாரிக்கும் மூலிகை சூப் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக திகழ்கிறது. அந்தவகையில் கடந்த 30 வருடங்களாக திருச்சியில் மூலிகை ஜூஸ் கடை நடத்தி வருகிறார் முரளி .
திருச்சி ராஜா பார்க் பகுதியில் அமைந்துள்ள முரளி பழச்சாறு கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகிறார்கள். காலை 5 மணி முதல் 9 மணி வரை பல வகையான பிரெஷ் ஜூஸ் மற்றும் சூப் ஆகியவற்றை நடை பயிற்சிக்கு வருபவர்களுக்கு குறைந்த விலை தருகிறார்.
காலை வேளையில் வாக்கிங் செல்வர்கள் அந்த கடைக்கு செல்லாமல் போக மாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையில் அருகம்புல் ஜூஸ், ஆவாரம் பூ, கேரட் ஜூஸ், வாழை தண்டு, கற்றாழை , உள்ளிட பல அனைத்து வகையான பழச்சாறுகள் கிடைக்கும்.
இன்றைய தலைமுறைக்கு பழங்கால உணவுகளை மீட்டு மீண்டும் அவர்களின் உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எடுத்துக்காட்டும் விதமாக இதுபோன்ற இயற்கை உணவகங்கள் மற்றும் மூலிகை சூப் கடைகள் பல தலைதூக்கி வருகிறது. அதற்கு மக்கள் அளிக்கும் ஆதரவும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை - பால் பண்ணை அருகே அமைந்துள்ள நண்டு சூப் கடை திருச்சியில் மிகவும் பிரபலமானதாகும்.
இந்தக் கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருபவர் செந்தில்குமார். தான் பிறந்து வளர்ந்த பகுதியில் உணவே மருந்து அதுவே மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தாம் இதை ஒரு சேவையாக செய்து வருவதாக கூறுகிறார் செந்தில்குமார்.
இந்தக் கடையில் நண்டு சூப், சோயா ஆகிய இரண்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மூலிகை பொருட்களை கொண்டு தனியாக மசாலா அரைத்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்தக் கடை இரவு 7:30 மணியிலிருந்து 9 மணி வரை திறந்திருக்கும். கடை திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் இன்று இந்த நண்டு சூப் மற்றும் சோயா ஆகியவற்றை சாப்பிடுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை தருகிறார்கள்.
ரசாயன பொருட்கள் கலப்படம் இல்லாமல் இயற்கையான முறையில் விளையும் பொருள்களை வைத்து தரமாக விற்பனை செய்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதற்கு எளிய மனிதர்கள் நடத்தும் கடைகளுக்கு கிடைக்கும் வரவேற்பே சாட்சியாகும்.