For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியாவின் இளம் நம்பிக்கை சாய் சுதர்சன்!

08:30 PM May 26, 2025 IST | Murugesan M
இந்தியாவின் இளம் நம்பிக்கை சாய் சுதர்சன்

 தமிழ்நாடு ரஞ்சி அணியில் தொடங்கிய சாய்சுதர்சனின் வெற்றிப்பயணம் ஐ.பி.எல், இந்திய அணியின் டி20, ஒரு நாள் தொடரை கடந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை எட்டியுள்ளது. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் சாய்சுதர்சன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறுவாரா என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த சீசன் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் 2027 வரை நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதில் இந்திய அணி உறுதியாக உள்ளது.  அதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது. புதுமுக வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தாலும், தமிழக வீரர் சாய்சுதர்சன் இடம்பிடித்திருக்கும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

கடந்த 2 வருடங்களில் சாய்சுதர்சனின் வளர்ச்சி, இந்திய கிரிக்கெட் அணியில் அவரது இடத்தை தடம் பதிக்க செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சாய் சுதர்சன் தமிழ்நாடு அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காகவும் அளித்த பங்களிப்பு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

2022ம் ஆண்டு, முதல் தர கிரிக்கெட்டில் தமிழ்நாடு ரஞ்சி அணிக்காக விளையாடிய சாய் சுதர்ஷன், தன் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவே, அவருக்கான வாய்ப்பும் உறுதுணையாக இருந்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ள சாய் சுதர்சன், இதுவரை 900 மேற்பட்ட ரன்கள், 2 சதங்கள், 5 அரை சதங்கள் என நம்பிக்கையான டாப் ஆர்டர் பேட்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சராசரியாக 50 ரன்களை வைத்திருந்த சாய் சுதர்சனுக்கு இந்திய ஏ அணியிலும் வாய்ப்பு கிட்டியது.

Advertisement

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்ஷன், 2023 ஆண்டு முதல் அந்த அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்ஷன் தனது அதிரடி ஆட்டத்திற்கு பேர் போனவர். குறிப்பாக அந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் அதிரடியாக ஆடி 96 ரன்களை குவித்தார்.

2024 ல் மிகவும் பரிட்சயப்பட்ட வீரராகவும், மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள வீரராகவும் களமிறங்கிய சாய் சுதர்ஷன் அந்த சீசனில் மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் ஆடி, 527 ரன்களை விளாசினார். அதிலும் இந்த ஆண்டு இதுவரை 638 ரன்கள் விளாசியுள்ள சாய் சுதர்ஷன், 1 சதம் மற்றும் 5 அரை சதங்கள் விளாசி குஜராத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 61 பந்துகளில் சதம் விளாசிய சாய் சுதர்ஷன், குஜராத் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். இந்திய அணியை பொறுத்தவரை சாய் சுதர்ஷன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும், சர்வதேச டி20 போட்டிகளில் 2024 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் களமிறங்கியுள்ளார்.

தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தது மூலம் டெஸ்ட் வீரராக களமிறங்குகிறார் சாய் சுதர்ஷன். இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் surrey அணிக்காக கடந்த 2023 மற்றும் 24 ஆகிய ஆண்டுகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு.

இடது கை பேட்டரான சாய் சுதர்சனின் ஃபர்ஸ்ட் கிளாஸ் மற்றும் ஐபிஎல் பார்ம் பொறுத்தே அவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்துள்ளது. சாய் சுதர்சன் தனது பெற்றோர்களின் விளையாட்டு பின்னணியால் ஊக்கமடைந்தவர். அவரது தந்தை மற்றும் தாயார் இருவரும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் என்பதால், சாய் தனது சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் காட்டினார். இந்த குடும்ப ஆதரவு மற்றும் வழிகாட்டுதலால், சாய் சுதர்சன் இன்று இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடது கை ஓப்பனிங் பேட்டர் மற்றும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கும் வீரர்களுக்கான தேடலில் ஏற்கனவே யசஸ்வி ஜெய்ஸ்வால் அந்த இடத்தை பிடித்திருக்கும் நிலையில், தற்போது சாய் சுதர்சனும் கூடுதல் பங்களிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. அவரது ஒழுக்கமான பேட்டிங் திறன் மற்றும் டிசிப்ளினுடனான குணத்திற்கு இன்னும் நிறைய உயரங்கள் செல்வார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட சாய்சுதர்சன், டெஸ்ட் வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வருவார் இளம் வீரர் சாய் சுதர்சன்.

Advertisement
Tags :
Advertisement