For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

07:00 PM Jun 18, 2025 IST | Murugesan M
இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி   grey பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை  நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது என்று the International Institute for Strategic Studies ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து,  நிதி நடவடிக்கை பணிக்குழு (The Financial Action Task Force  FATF ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில்,அப்பாவி பொதுமக்கள் 26 மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகவும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள், " பெரிய அளவில் நிதி ஆதரவு இல்லாமல் நடக்காது" என்று கூறியுள்ள நிதி நடவடிக்கை பணிக்குழு, எந்தவொரு தனி  நாடும் இப்படிப்பட்ட பயங்கரவாத சவால்களைத் தனியாக எதிர்த்துப் போராட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பயங்கர வாதத்தை எதிர்த்து போராட அழைப்பு விடுத்துள்ள நிதி நடவடிக்கை பணிக்குழு,
பயங்கரவாத அமைப்புகளுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான பகுப்பாய்வை வெளியிடுவதற்கான திட்டங்களையும் அறிவித்துள்ளது.

Advertisement

அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொனியும் மொழியும் வழக்கத்துக்கு மாறாக வலிமையாகவும் கூர்மையானதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, "அரசு ஆதரவு பயங்கரவாதத்தை" ஒரு கடுமையான ஆபத்து என்று நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் தனது அரசின் கொள்கையாகவே பயங்கரவாத நெட்வொர்க்குகள் மூலம் பயங்கரவாதத்தைச் செயல்படுத்துகிறது என்ற இந்தியாவின் நீண்டகால குற்றச் சாட்டுக்களையே  நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, பாகிஸ்தானின் பயங்கரவாத நிதியுதவி மற்றும் பிறநாடுகளின் உதவிப் பணத்தைப் பயங்கர வாதத்துக்கு எப்படி  தவறாகப் பயன்படுத்துகிறது என்பது பற்றிய ஆவணத் தொகுப்பை இந்தியா தயாரித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்திருக்கும் FATF ஒரு குறிப்பிட்ட பயங்கரவாதத் தாக்குதலை நேரடியாகக் கண்டிப்பது இது மூன்றாவது முறை ஆகும். இதன் மூலம், வரும் அக்டோபரில்  நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் மீண்டும் தள்ளப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையே, பிரிட்டனில் இயங்கிவரும் the International Institute for Strategic Studies என்ற சிந்தனை குழுவும் தனது ஆய்வறிக்கையில், இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் முன்னெப்போதும் இல்லாத சிறப்புமிக்க நடவடிக்கையாகும் என்று கூறியுள்ளது. பொதுமக்களையோ அல்லது ராணுவ உள்கட்டமைப்பையோ குறிவைக்காமல், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கர வாத அமைப்புக்களின் தளங்களையே குறிவைத்து துல்லியமாக இந்தியா தாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

பல்வேறு தளங்களில் இந்தியாவை எதிர்க்கப் பயங்கரவாத குழுக்களையே நம்பியுள்ள பாகிஸ்தான், ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளை  அரசு மரியாதையுடன் நடத்தியதும், அந்த நிகழ்வுகளில் பாகிஸ்தானின் இராணுவ மற்றும் காவல் துறையினர்  கலந்து கொள்ள வைத்ததும்  ஆச்சரியமானதல்ல என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா அழைத்தும் பாகிஸ்தான் மறுத்துவிட்டது. ஆப்ரேஷன் சிந்தூரின் இராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையிலும் சிந்து நதிநீர் ஒப்பந்தமும் காலவரையறை இன்றி நிறுத்தி வைத்துள்ளது இந்தியா.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தமும் நிறுத்திவைக்கப்படும் என்று இந்தியா திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.  Salal (சலால்) மற்றும் Baglihar  (பாக்லிஹார்) நீர்மின் அணைகளின் மதகுகளை இந்தியா மூடுவதால் பயிர் விதைப்புக் காலத்தில் பாகிஸ்தானில் நீரோட்டம் இல்லாமல் போகும் என்றும், அதனால், பருத்தி, சோளம், அரிசி மற்றும் கரும்பு பயிர்களின் விளைச்சலும் குளிர்காலத்தில் கோதுமை உற்பத்தியும் மற்றும் நீர்மின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், செனாப் மற்றும் ஜீலம் நதிகளில் நீர்மின் திட்டங்களுக்கான அணைகளை இந்தியா    வேகமாகக் கட்டத் தொடங்கி இருப்பதால்,  இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் பாகிஸ்தானின் அனைத்து பயிர் விளைச்சலும் பாதிப்படையும் என்று  சிந்தனைக் குழுவின் அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா கடற்படையும் களத்தில் இறங்கியிருந்தால், பாகிஸ்தான் நான்கு பகுதிகளாக  உடைந்திருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இனியும் பாகிஸ்தான் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், இந்தியக் கடற்படையும் நடவடிக்கையில் இறங்கும் என்று எச்சரித்துள்ளார்.

இதையும் குறிப்பிட்டுள்ள சிந்தனை குழுவின் அறிக்கை, ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பதிலடி தரப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்க மறுத்தால், மற்றொரு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்தும் இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கைகள்  வெற்றி பெற்றதையே இந்த அறிக்கைகள் காட்டுகின்றன.

Advertisement
Tags :
Advertisement