For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் - ஈரான்!

09:05 PM Jun 30, 2025 IST | Murugesan M
இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல்   ஈரான்

அண்மையில் நடைபெற்ற ஈரான் - இஸ்ரேல் மோதலின்போது அந்நாடுகளில் உள்ள இந்திய முதலீடுகளுக்கும், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

மத்திய கிழக்கில் பெரும் சூறாவளியைக் கிளப்பி ஓய்ந்துள்ளது, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர். வெறும் 12 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த மோதலில், அதிநவீன ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், கிளஸ்டர் வெடிகுண்டுகள் எனக் கைவசமுள்ள அனைத்து ஆயுதங்களையும் இருநாடுகளும் களமிறக்கின.

Advertisement

மக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகளும் பள்ளிகளும் உள்ள இடங்கள் எனப் பாரபட்சம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால், இந்தியா முதலீடு செய்துள்ள இடங்களில் மட்டும் தப்பி தவறிக்கூட இஸ்ரேலும் ஈரானும் தாக்குதல் நடத்தவில்லை. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மீது சிறு கீறலும் விழவில்லை.

இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையும்,  பிரதமர்  நரேந்திர மோடியும்தான். ஈரானில் உள்ள சாபஹார் பகுதியில் உள்ள துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுடனும், ஐரோப்பியத் தேசங்களுடனும், ரஷ்யாவுடனும் இந்தியா எளிதில் வணிகம் மேற்கொள்ள இந்த துறைமுகம் பாலமாக இருந்து வருகிறது. மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் இந்த துறைமுகம்  துருப்புச்சீட்டாக உள்ளது.

Advertisement

ஈரானின் முக்கிய இடங்களைக் குறிவைத்து சாரை சாரையாக ஏவுகணைகளை அனுப்பிய இஸ்ரேல், சாபஹார்  துறைமுகம் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. இத்தனை ஏன், அந்த துறைமுகம் அருகில் உள்ள இடங்களில் கூட இஸ்ரேல் தாக்குதல் நடத்தத்  தயங்கியது. இத்தனைக்கும் ஈரானில் உள்ள மிகப்பெரிய துறைமுகமே சாபஹார் துறைமுகம்தான். அதனைத் தாக்கினால் ஈரானுக்கு மிகப்பெரிய சேதத்தை இஸ்ரேலால் ஏற்படுத்தியிருக்க முடியும்.

ஆனால், இந்தியாவை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் இஸ்ரேல் மிகக் கவனமாக இருந்தது. இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் கொண்டுள்ள நெருங்கிய பந்தத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆரம்பம் முதலே பிரதமர் மோடியுடன் நல்ல நட்புறவைப் பாராட்டி வருகிறார்.

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியவுடனே உலக நாட்டு தலைவர்கள் சிலரை தொடர்புகொண்டு நெதன்யாகு பேச முடிவெடுத்தார்.  அவ்வாறு அவர் முதலில் பேசிய தலைவரில் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி. தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? மத்திய கிழக்கில் நிலவும் சூழல் என்ன? என்பது குறித்தெல்லாம் மோடியிடம் நெதன்யாகு எடுத்துரைத்தார்.

மறுபுறம், இந்தியாவுடன் நட்புறவு பேணுவதில், இஸ்ரேலுக்குச் சற்றும் சளைத்த நாடல்ல ஈரான். இஸ்ரேலில் இந்தியா முதலீடு செய்துள்ள இடங்களில் ஈரானும் எந்த தாக்குதலும் நடத்தவில்லை. தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறத் தேவையான உதவிகளையும் ஈரான் செய்து கொடுத்தது.

போர் சூழல் காரணமாக ஈரானின் வான் போக்குவரத்து பரப்பு மூடப்பட்டிருந்தது. அதனைத் திறந்தால் மட்டுமே இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர முடியும் என்ற நிலை. இது தொடர்பாக ஈரானிடம் கோரிக்கை விடுத்தது இந்தியா. ஈரான் சற்றும் யோசிக்கவில்லை. இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறத் தனது வான் பரப்பைத் திறந்துவிட்டு உதவிக்கரம் நீட்டியது.

மேலும், இஸ்ரேலை போலவே ஈரானும் இந்தியாவைத் தொடர்புகொண்டு, போர் சூழல் குறித்து விளக்கியது. போர் முடிந்தவுடன், தங்களுக்குத் துணை நின்றதற்காக இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் ஈரான் நன்றி தெரிவித்தது. இஸ்ரேல், ஈரான் என்றல்ல உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே இந்தியாவுடன் நட்புறவு பாராட்டவே விரும்புகின்றன. இதில் பாகிஸ்தானும் சீனாவும் மட்டும் விதிவிலக்கு.

அனைத்து நாடுகளையும் அரவணைத்துச் செல்லும் வகையில்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த நாடுகளும் இந்தியாவுக்குத் துணை நிற்கின்றன. தங்களே ஒரு பிரச்சனையில் உள்ள போதிலும்கூட இந்தியாவிற்கு உதவ முன்வருகின்றன.

Advertisement
Tags :
Advertisement