For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

07:55 PM Jun 04, 2025 IST | Murugesan M
இந்தியா கற்க வேண்டிய பாடம்   போரில் game changer  ஆக மாறிய swarm drones

ஆப்ரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தி ரஷ்யாவின் 40க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை உக்ரைன் அழித்துள்ளது.  உலகையே திரும்பி வியந்து பார்க்க வைத்த, ரஷ்யாவின் எல்லைக்குள் சென்று ரஷ்யாவைத் தாக்கிய  உக்ரைனின் இராணுவ நடவடிக்கை, எதிர்கால போரின் நவீனத் தன்மையை  வெளிப்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆளில்லா விமானம் என அழைக்கப்படும் ட்ரோன் ஒரு பறக்கும் ரோபோ ஆகும். இந்த ட்ரோன்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெகு தொலைவில் இருந்து கட்டுப்படுத்தலாம். சில ட்ரோன்கள் கட்டுப்படுத்தப் பட்ட மென்பொருள் மூலம், தாமாகவே  இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.  மேலும் உலகளாவிய GPS உடன் இணைத்தும் ட்ரோன்கள் செயல்படுகின்றன.

Advertisement

ட்ரோன்கள் நவீன போரின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. பெரும்பாலும் ட்ரோன்கள்,விமான எதிர்ப்பு இலக்கு,உளவுத்துறை தகவல்கள்  சேகரிப்பு, மற்றும் பறக்கும் வெடிமருந்து கிடங்காகவும் செயல்படுகின்றன. போர்ச் சூழலில், விமானிகளுக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் பணிகளுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ராணுவ நடவடிக்கைகளில் ட்ரோன்கள் ஒரு கேம்-சேஞ்சராக உள்ளது. குறிப்பாக, போரின் போக்கையே ட்ரோன்கள் மாற்றி விடுகின்றன. குறிப்பாக, ஸ்வர்ம் ட்ரோன்கள் (Swarm drones)என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களின் கூட்டமாகும்.  அதாவது கொத்தாக ட்ரோன்கள் வானில் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த ட்ரோன்கள்,  ஒருங்கிணைந்த, தன்னாட்சி அமைப்பில் வானில் பறக்கின்றன.

Advertisement

ஸ்வர்ம் ட்ரோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. நிகழ் நேரத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் தனிப்பட்ட ட்ரோன்களை விடச் சிக்கலான பணிகளை மிகவும் திறம்படச் செய்கின்றன. எடை குறைந்த, விலை குறைந்த  இந்த ட்ரோன்கள் உயர் தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக் கூடியதாகும்.

ரேடார்கள் மற்றும்  வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி விட்டுப் பறக்கும் ஸ்வர்ம் ட்ரோன்கள் அழிவை ஏற்படுத்தக் கூடியவையாகும். இன்னொரு விஷயம், கொத்தாகப் பறப்பதால் ஒரே நேரத்தில்  பல இடங்களைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

கடந்து மூன்று ஆண்டுகளாக நடந்துவரும்,ரஷ்யா- உக்ரைன் போரில் இரு நாடுகளும் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். போர் களத்தில்  எவ்வாறு எல்லாம் ட்ரோன்கள் பயன்படுத்தப் படுகின்றன என்பதற்கு உக்ரைனும், ரஷ்யாவும் மற்ற நாடுகளுக்குச் செயல்முறை  பாடம் எடுத்து வருகின்றன.

உக்ரைனின் ஸ்பைடர்ஸ் வெப் தாக்குதல், விமானிகளின் உயிரைப் பணயம் வைக்காமல் எதிரி நாட்டுக்குள் சென்று குறிப்பிடத்தக்க இலக்குகளைத் துல்லியமாக அழித்துள்ளன.  ஏற்கெனவே நான்கு நாட்கள் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரில், இந்தியா வெற்றிபெற்றது. குறிப்பாக,  பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தாக்கி அழித்தது.

ட்ரோன் போர், பல அடுக்கு வான் பாதுகாப்பு, மின்னணு போர் என ஏதுவாக இருந்தாலும், இராணுவ நடவடிக்கைகளில் தொழில்நுட்ப ரீதியாகத் தன்னிறைவு அடைந்துள்ள  இந்தியாவின் பயணத்தில் ஆபரேஷன் சிந்தூர் ஒரு மைல்கல் ஆகும்.

முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை, ஊடுருவ முடியாத எல்லை பாதுகாப்பை வான்வெளியில் உருவாக்கி, பாகிஸ்தானின் பழிவாங்கும் முயற்சிகளைத் தவிடுபொடியாக்கியது.

ரஷ்யாவுக்குள் சரக்கு லாரிகளில் மரக் கொட்டகைகள் அமைத்து ,ரஷ்யாவுக்குள் ஸ்வார்ம் ட்ரோன்களைக் கடத்திய உக்ரைன், ரஷ்யாவுக்குப் பேரழிவைத் தந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட இலக்குகள் கூட தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதே ஸ்பைடர் வெப் கற்றுத் தந்த பாடமாகும்.

எல்லைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு ஊடுருவலையும் தடுப்பதற்கும், புதிய  உரிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை இந்தியா விரைந்துசெயல்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement