இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!
Operation Sindoor-ன் போது பாகிஸ்தான் ஏவிய சீனாவின் PL-15 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக வானில் சுட்டு வீழ்த்தியது. இந்தியாவின் எல்லைக்குள் நொறுங்கி விழுந்த PL-15 ஏவுகணையின் பாகங்களை, விரிவான ஆய்வுக்காகப் பார்வையிடுவதற்கு பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட Five Eyes நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் முதல்முறையாகச் சீனாவில் தயாரிக்கப்பட்ட PL-15 நீண்ட தூர வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையைச் செலுத்தியது. JF-17 போர் விமானத்தால் ஏவப்பட்ட இந்த சீனாவின் ஏவுகணையை இந்தியா வானிலேயே இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியது.
ரஷ்யாவின் S-400 மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் தீர் போன்ற ஒருங்கிணைந்த வான் தடுப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாகத் தடுத்தது. முதன் முறையாகப் போரில் சீனாவின் PL-15E ஏவுகணை சுக்கு நூறாக நொறுங்கி தோல்வியைக் கண்டுள்ளது.
பஞ்சாபின் ஹோஷியார்பூரில் முழுமையாகச் சேதமடையாத PL-15 ஏவுகணை மீட்கப் பட்டது. துருக்கியின் YIHA மற்றும் சோங்கார் ட்ரோன்கள் உட்பட மீட்கப்பட்ட சீனாவின் PL-15E ஏவுகணை இடம்பெற்றிருந்த காணொளியை இந்திய விமானப் படை வெளியிட்டது.
சீனாவின் PL-15E ஏவுகணையின் தோல்வி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சேதமடைந்த PL-15E ஏவுகணை வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. PL-15E ஏவுகணை கிடைத்திருப்பது இந்தியாவுக்கு வெறும் போர் வெற்றி மட்டுமல்ல; இது ஒரு மூலதன வெற்றியாக அமைந்துள்ளது.
“ரகசிய ஆயுதக் கிடங்கிற்குப் போகாமல் PL-15E யைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை என்று அமெரிக்க இராணுவ ஆய்வாளர் ஜான் ரிட்ஜ், தனது எக்ஸ் தளத்தில் ஆச்சரியத்துடன் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் ஒருங்கிணைந்து PL-15E ஏவுகணையின் உட்பகுதிகளை ஆராய விருப்பம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் தங்களுடைய மேம்பட்ட AIR -TO-AIR ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் ரஃபேல் விமானங்களில் பிரான்ஸின் மெடியார் ஏவுகணை பொருத்தப் பட்டுள்ளது. இது PL-15E க்கு முக்கிய போட்டி ஏவுகணையாகும்.
அதேபோல், சீனாவின் எந்த வான்வழித் தாக்குதல்களையும் சமாளிக்கும் வகையில், தனது விமானப்படையை ஜப்பான் மேம்படுத்தி வருகிறது. எனவே, இரு நாடுகளும் PL-15E திறன்களை அறிந்துகொள்ள முயற்சி செய்கிறது.
PL-15E ஏவுகணையின் ரேடார் கையொப்பம், மோட்டார் அமைப்பு, வழிகாட்டி தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டில் மின்னணு ஸ்கேன் தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய இந்நாடுகள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
PL-15 என்பது சீனா ஏர்போர்ன் ஏவுகணை அகாடமி (CAMA) தயாரித்த காட்சிக்கு அப்பாற்பட்ட AIR TO AIR ஏவுகணை ஆகும். PL-15 அதிகபட்ச செயல்பாட்டு வரம்பைக் கொண்டிருக்கும் ஏவுகணை ஆகும். 200 முதல் 400 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டதாகும். இது மேக் 4 ஐ விட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஏவுகணையாகும்.
J-20, J-16, J-10C, J-11B மற்றும் JF-17 விமானம் உட்படப் பல தளங்களில் இருந்து செலுத்தக் கூடிய வகையில் PL-15ஏவுகணை வடிவமைக்கப் பட்டுள்ளது. மேம்பட்ட J-20 ஸ்டெல்த் போர் விமானத்தில், நான்கு PL-15 ஏவுகணைகளைச் சுமந்து செல்ல முடியும் என்றும் கூறப் படுகிறது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட AIM-120D ஏவுகணை சுமார் 160 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் நிலையில், PL-15 அதை விட அதிகம் தூரம் மற்றும் அதிக வேகத்தில் செல்லக் கூடியதாகும்.
மேலும், 200 கிலோமீட்டர் வரம்பு வரை மட்டுமே செல்லக்கூடிய பிரான்ஸின் Meteor ஏவுகணையை விட அதிக திறன் கொண்டதாகும். இதில், Meteor ஏவுகணைகளை இந்தியா தனது ரஃபேல் விமானங்களில் பொருந்தியுள்ளது. இருப்பினும், PL-15 ஏவுகணைகள் விரைவான வேகத்தையும் நீண்ட இலக்குகளைத் தாக்கும் திறனையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
PL-15 ரக ஏவுகணைகளின் தாக்குதல்களை எதிர்த்து அழிக்கும் வகையில், ரஷ்யாவின் R-37M ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது. ரஷ்யாவின் R-37M ஏவுகணைகள் 300-400 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.
PL-15E வருகையால் அமெரிக்கா AIM-260 JATM எனும் புதிய ஏவுகணை தயாரிப்பை விரைவுபடுத்தியுள்ளது. இது PL-15E வை விட வலிமையானதும், நீண்ட தூர மற்றும் மின்னணு தாக்குதல்களுக்கு எதிரானது ஆகும்.
ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வெற்றி, சீனாவுக்கு அவமானமாக முடித்துள்ளது. அதிலும்,சீனாவின் PL-15E ஏவுகணை முழுமையாக இந்தியாவின் கையில் கிடைத்திருப்பது, ஒரு வரப் பிரசாதமாகும்.
வெடிக்காத ஏவுகணையை ஆராய்ச்சி செய்வதால், மிகவும் மேம்பட்ட AIR TO AIR ஏவுகணைகளில் சீனா பயன்படுத்திய தொழில்நுட்ப நுண்ணறிவைக் கண்டுகொள்ள முடியும் என்று சர்வதேச இராணுவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.