For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத "ஜெ.டி.வான்ஸ்" : அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை...!

07:45 PM Nov 01, 2025 IST | Murugesan M
இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத  ஜெ டி வான்ஸ்     அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்து மதத்தைச் சேர்ந்த தனது மனைவியான உஷா வான்ஸ் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது, அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் சர்ச்சைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்...

அமெரிக்க துணை அதிபரான ஜே.டி. வான்ஸ், சமீபத்தில் நடைபெற்ற "TURNING POINT USA" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது இந்து மதத்தைச் சேர்ந்த தனது மனைவியான உஷா வான்ஸ் என்றாவது ஒருநாள் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக்கொள்வார் எனக்கூறி தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement

பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகளில் உஷா தன்னுடன் தேவாலயத்திற்கு வருவதாகவும் கூறிய வான்ஸ், தான் நம்பும் சுவிசேஷம் அவரையும் ஒருநாள் தொடும் என நம்புவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், உஷாவிடம் அந்த மாற்றம் ஏற்படாவிட்டாலும் அதில் தனக்கு பிரச்னையில்லை என்ற அவர், கடவுள் அனைவரின் விருப்பத்திற்கும் சுதந்திரம் அளித்துள்ளதாகவும் பேசியிருந்தார்.

வான்ஸின் மத நம்பிக்கையை வெளிப்படுத்திய இந்தக் கருத்துக்கள் அவரது ஆதரவாளர்களிடையே கைத்தட்டல்களை பெற்றாலும், இந்திய வம்சாவளியினர் மற்றும் பல சமூக வலைதள பயனர்களிடையே கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. இந்நிலையில், ஜே.டி. வான்ஸின் கருத்துக்களை, முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கன்வல் சிபால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

வான்ஸ் தனது மனைவி உஷாவின் இந்து அடையாளத்தை வெளிப்படையாக ஏற்காமல், அவரை "இறை நம்பிக்கையற்றவர்" எனக் குறிப்பிடுவது மத சுதந்திரத்தின் அர்த்தத்தைப் புறக்கணிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மத சுதந்திரம் குறித்து உலக நாடுகளை விமர்சித்து வரும் நிலையில், அந்நாட்டின் துணை அதிபரே அவரது மனைவியின் மதத்தை மறுப்பது "இரட்டை நிலைப்பாடு" என்றும் சிபால் குற்றம்சாட்டினார். இது ஒருபுறமிருக்க டிரம்ப் ஆதரவாளரான மறைந்த சார்லி கர்கினின் மனைவி, எரிகா கர்குடன் துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் அதீத நெருக்கம் காட்டி வருவதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளும் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

மற்றொருபுறம் அமெரிக்கா தனது இரண்டாவது பெண்மணியாக ஒரு இந்துவை ஏற்காது என்பதால், வான்ஸ் விரைவில் தனது மனைவி உஷாவை விவாகரத்து செய்ய வாய்ப்புள்ளதாகப் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். இப்படி துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் வாழ்க்கையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துகொண்டிருக்க, அவரது மனைவி உஷாவோ தனது இந்து அடையாளத்தை உறுதியாகக் காத்து வருகிறார்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் எண்ணம் தனக்கு இல்லை என விளக்கமளித்துள்ள அவர், தங்கள் குழந்தைகள் இந்து மற்றும் கிறிஸ்தவம் என இரு மத மரபுகளையும் அறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யெல் சட்டக் கல்லூரியில் படித்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வயப்பட்ட வான்ஸ் - உஷா தம்பதியர், கடந்த 2014-ம் ஆண்டுத் திருமணம் செய்துகொண்டனர்.

அவர்கள் திருமணத்தில் இந்துப் பண்டிதர்கள் மட்டுமின்றி கத்தோலிக்க பாதிரியார்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இவர்களின் குழந்தைகள் மூவரும் கிறிஸ்துவ மரபைப் பின்பற்றி வளர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், துணை அதிபர் ஜெ.டி.வான்ஸின் சமீபத்திய அவசரப்பேச்சு அவரது மதத்தையும், மரியாதையையும் விலைக்கு விற்கும் அரசியல் நாடகமாகப் பார்க்கப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தனது வாழ்க்கையை மாற்றிய மனைவி உஷா வான்ஸின் நம்பிக்கையை மதிக்காமல், தேர்தல் வெற்றிக்காக வான்ஸ் பேசிய வார்த்தைகள் அமெரிக்கா - இந்தியா உறவிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement