இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!
ஆதார் விவரங்களை மாற்றம் செய்ய இனி இ- சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.. மொபைல் போனிலேயே அப்டேட் செய்யும் வகையில் விரைவில் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க ஆதார் எண், வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவது வரை முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது.
இந்த ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்வது அவசியம். இன்றைய சூழலில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றவும், ஆதார் கார்டை அப்டேட் செய்யவும் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் பெயர், முகவரி, பாலினம் போன்ற அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும்.
ஆனால், ஆன்லைனில் விவரங்களை மாற்றுவது, படித்த இளைஞர்களுக்கே சற்று கடினமாகத் தான் பார்க்கப்படுகிறது. இதனை எளிமைப்படுத்த விரும்பிய இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பிரத்யேக செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் செயலி, ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க எளிதான, பாதுகாப்பான வழிமுறைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொபைல் எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஸ்மார்ட்போன்களிலிருந்து நேரடியாகப் புதுப்பிக்க இந்தச் செயலி உதவும். எந்தவொரு சிறிய மாற்றங்களுக்கும் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்லும் அவசியத்தை இந்தச் செயலி நீக்குகிறது. பிறந்த தேதி, பெயர் அல்லது முகவரி போன்ற விவரங்களை மாற்றுவதற்கு இ சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், e-ஆதார் செயலி பயன்பாடிற்கு வந்து விட்டால் மக்கள், ஆதார் விவரங்களை வீட்டில் இருந்தே மாற்றிக் கொள்ளலாம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைச் சரிபார்க்கும் வகையிலும் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மோசடிக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
தற்போது பல்வேறு இடங்களில் ஆதார் தரவுகளை வைத்து மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஆதார் செயலி மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மோசடிகளைத் தடுக்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு, ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இ-ஆதார் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் சப்போர்ட் செய்யும் வகையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.