இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
நடப்பாண்டு முதல் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவருக்கு தங்கப் பதக்கமும், நம்மாழ்வார் விருதும் வழங்கப்படும் என, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இயற்கை வேளாண் ஆளுமைகளுடன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதில் வேளாண் பல்கலைக்க ழகத்தின் பேராசிரியர்கள், வேளாண் சங்கங்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வேளாண் தொழிலில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதனை தொடர்ந்து வேளாண் பூச்சியியல் என்ற புத்தகத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், துரதிருஷ்டவசமாக மனித செயல்களால் காலப்போக்கில், நமது மண்ணும் காலநிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ரசாயனம், பூச்சிக் கொல்லிகள் நிலத்தை பாழாக்கி விடும் என்பதால் இயற்கை விவசாயம் அவசியமானது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.