For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இறுதி கட்டத்தை நெருங்கும்"மிஷன் 2026" : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

08:59 PM Nov 01, 2025 IST | Murugesan M
இறுதி கட்டத்தை நெருங்கும் மிஷன் 2026    அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி

2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக ஒழிப்போம் என்ற அமித் ஷாவின் சூளுரையால், மாவோயிஸ்டுகளின் புகலிடமான பஸ்தர் பகுதி மீண்டும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அங்குப் பதுங்கியுள்ள கடைசி 300 மாவோயிஸ்டுகள் மிஷன் 2026-ன் கடைசி சவாலாக உருவெடுத்துள்ளனர். இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் பகுதி மாவோயிஸ்டு அமைப்பின் இதயமாகச் செயல்பட்டு வருகிறது. அடர்ந்த காடுகள், மலைப்பாங்கான நிலப்பரப்பு, அரசு நிர்வாகங்கள் குறைந்த அளவில் செயல்படும் தொலைதூர கிராமங்கள், மாவோயிஸ்டுகளுக்குப் பல ஆண்டுகளாகப் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.

Advertisement

அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தங்கள் சுய நிர்வாக அமைப்புகளை உருவாக்கி, உள்ளூர் பழங்குடியின மக்களின் ஆதரவை பெற்றனர். அதன் காரணமாக அப்பகுதி வன்முறை, ஆபத்தின் பிறப்பிடமாக இருந்து வந்தது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள், மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக ஒழிப்போம் எனச் சூளுரைத்தது, அவர்களின் ஆதிக்கத்தை தலைகீழாக மாற்றியது. "மிஷன் 2026" என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிதீவிர நடவடிக்கைகள், மாவோயிஸ்டு படைகளின் வழிநடத்தலை சீர்குலைத்து, அவர்களின் தாக்கத்தை நாடு முழுவதும் படுவேகமாகக் குறைத்து வருகிறது.

Advertisement

அதன் விளைவாக நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் இயல்பு வாழ்க்கையை தேடி தங்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்து வருகின்றனர். இருப்பினும், தென் பஸ்தர் மற்றும் டர்பா போன்ற பகுதிகளில் பதுங்கியுள்ள சிறு மாவோயிஸ்டுப் படைகள், மீதமுள்ள தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள கடுமையாகப் போராடி வருகின்றனர்.

வடக்கு பஸ்தரில் இருந்த மாவோயிஸ்டுப் படைகள் பெரும்பாலும் பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்ததாலும், கைது செய்யப்பட்டதாலும் அவை பல பிரிவுகளாகச் சிதறியுள்ளன. ஆனால், தென் பஸ்தர், மேற்கு பஸ்தர் மற்றும் டர்பா மலைப்பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாவோயிஸ்டு தலைவர்களான தேவ்ஜி, பாப்பாராவ், ஹிட்மா மற்றும் கணேஷ் உய்கே தலைமையில் சுமார் 300 பேர் தென் பஸ்தரின் அடர்ந்த வனப்பகுதியில் செயல்பட்டு வருவதாகப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த 4 முக்கிய தலைவர்களின் தலைக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கும் வரை "மிஷன் 2026" நடவடிக்கை முழுமை பெறாது என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் தற்போது தங்களின் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டதாகவும், இன்னும் 300 மாவோயிஸ்டுகள் மட்டுமே தொடர் செயல்பாட்டில் உள்ளதாகவும் பஸ்தர் காவல் ஆய்வாளரான ஜென்ரல் சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள மாவோயிஸ்டுகள் சரணடையும் பட்சத்தில் அவர்களை மீட்டு சமூகத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ள அவர், இல்லையென்றால் அவர்கள் அனைவரையும் நேருக்கு நேர் மோதித் தோற்கடிப்போம் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் சரணடைந்த ஆயிரத்து 300 மாவோயிஸ்டுகள் உட்பட, கடந்த 25 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரிடம் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க இந்தச் சரணடைவு நிகழ்வு அலை மாவோயிஸ்டு அமைப்புகள் மத்தியில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்புத்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாகச் சில நாட்களுக்கு முன் சரணடைந்த மாவோயிஸ்டுகளை, அந்த அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான அபய் 'துரோகிகள்' எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். அதற்குப் பதிலளித்து பதிலறிக்கை வெளியிட்ட மற்றொரு மாவோயிஸ்டு தலைவரான ரூபேஷ், தனது சரணடைவு அமைப்பின் தலைமை அளித்த உத்தரவின் பேரில் நடந்ததாகத் தெரிவித்திருந்தார்.

இது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைப்போர் மற்றும் ஆயுதங்களுடன் போராட நினைப்போர் என இரு பாகங்களாக மாவோயிஸ்டு அமைப்பு பிரிந்து செயல்படுவதை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இந்நிலையில், சரணடைந்தவர்களும், ஆயுதப் போராட்ட மனநிலையில் உள்ளவர்களும் ஒரே பகுதியில் வாழ்வது, பஸ்தர் பகுதியில் புதிய ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்கள் மீது காட்டில் உள்ளவர்களுக்குச் சந்தேகம் மற்றும் பழிவாங்கும் உணர்வு அதிகரித்துள்ளதால், சரணடைந்தவர்கள் தங்கள் மனங்களில் அச்ச உணர்வுடன் வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், அவர்களின் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்கு இடமின்றி உறுதி செய்யப்படும் எனப் பாதுகாப்பு படையினர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தனது 25-ம் ஆண்டு நிறைவை கொண்டாடவுள்ள இந்நேரத்தில், கடந்த 25 ஆண்டுகளில் அங்கு 3 ஆயிரத்து 404 துப்பாக்கி சண்டைகள் நிகழ்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில், மொத்தம் ஆயிரத்து 541 மாவோயிஸ்டுகளும், ஆயிரத்து 315 பாதுகாப்பு படை வீரர்களும், ஆயிரத்து 817 பொதுமக்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்த நீண்ட போர் வெறும் எண்களால் மட்டுமல்ல, நம்பிக்கையாலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீளுருவாக்கத்தாலும் அளவிடப்படுகிறது. மாவோயிஸ்டு பிரிவுகளின் சீர்குலைவால் "மிஷன் 2026" வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், உண்மையான வெற்றி அங்குள்ள மக்கள் மீண்டும் அமைதியான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும்போதே கிடைக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Advertisement
Tags :
Advertisement