இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் - நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் திருட்டு புகாரளித்த நிகிதா மீது பண மோசடி செய்ததாக திருமங்கலம் ஏஎஸ்பி-யிடம் எஃப்.ஐ.ஆர் நகலுடன் பலர் புகாரளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின் போது காவலர்களால் தாக்கப்பட்டு இளைஞர் உயிரிழந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அஜித்குமார் மீது திருட்டு புகாரளித்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா மீது பலர் மோசடி புகாரளித்து வருகின்றனர்.
நிகிதாவின் தந்தை ஜெயம் பெருமாள் மற்றும் சகோதரர் சரண் கவி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக பச்சகோப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம், அவரது மகன் தெய்வம் மற்றும் உறவினர் வினோத்குமார் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல செல்வம் என்பவரிடம் 25 லட்சம் ரூபாயும், முத்துக்கொடி, முருகேசன் ஆகியோரிடம் இரண்டரை லட்சம் ரூபாயும் மோசடி செய்ததாக திருமங்கலம் காவல்நிலையத்தில் அடுத்தடுத்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.