For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இஸ்ரேல் - ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? - சிறப்பு தொகுப்பு!

09:00 PM Jun 18, 2025 IST | Murugesan M
இஸ்ரேல்   ஈரான் போர்   இந்தியாவுக்கு பாதிப்பா    சிறப்பு தொகுப்பு

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் பேரலுக்கு 6 டாலர் அதிகரித்து 78 டாலராக உயர்ந்துள்ளது.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

வடக்கே ஈரான், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என அமைந்துள்ள ஹோர்முஸ் ஜலசந்தி, வளைகுடாவை அரேபியக் கடலுடன் இணைக்கிறது.

Advertisement

உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது ஹோர்முஸ் ஜலசந்தி.  உலகளவில் விநியோகிக்கப்படும் எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகத் தான் செல்கிறது. அதாவது கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20 சதவீதம் ஈரானுக்கு வடக்கே உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. எந்த நேரத்திலும், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஜலசந்தி வழியாக ஒரு நாளைக்குப் பல டேங்கர் கப்பல்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.

இதற்கிடையே, இஸ்ரேல் ஈரான் தீவிர போர் காரணமாகக் கப்பல் சரக்கு போக்குவரத்து தடைப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் உள் கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், ஒரு நாளைக்குப் பல மில்லியன் கணக்கான பீப்பாய் அளவில் நடைபெறும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டது.

Advertisement

ஈரானின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தளங்களை இஸ்ரேல் தாக்கினால், (Brent Crude Oil) பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 100 டாலர் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஒரு நாளைக்கு ஈரானில் இருந்து 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஆகிறது. இந்நிலையில், ஈரானின் புஷேர் மாகாணம் கண்கணில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஈரானின் எண்ணெய் உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.  உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

OPEC+ ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகள், ஜூலை மாதம் எதிர்பார்த்ததை விட அதிகமான உற்பத்தியை அறிவித்திருப்பதால், ஓரளவுக்குக்  கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கும் என்று வணிக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யவில்லை. ஆனாலும் நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. ஈராக்,சவூதி அரேபியா,மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில் மாணவர்கள் உட்பட 20,000 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 85,000 யூதர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2025  மார்ச் 10ஆம் தேதி  நிலவரப்படி, 6,694 இந்தியத் தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலை அடைந்துள்ளனர். மேலும்,   தற்போது சுமார் 10,765 இந்தியர்கள் ஈரானில் வசிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில், அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும்,  தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும்,  ஈரானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுடன் இந்தியா குறிப்பிடத்தக்க வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுடனான வர்த்தகம் மொத்தம் 5 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் ஈரான் போர் தொடரும் நிலையில், இந்த வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement