இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போர், புவிசார் அரசியல் ஒழுங்கையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. இதில் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டும் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக நிற்கிறது. பிரதமர் மோடியின் இந்த அணுகுமுறை சர்வதேச அளவில் பாராட்டப்படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2014ம் ஆண்டு முதல் முறையாக நாட்டின் பிரதமரான பிரதமர் மோடி, இஸ்ரேலிடம் அதிகம் நெருக்கம் காட்டுவதாக விமர்சனம் எழுந்தது. அதே நேரம் 2015-ல் ஐ.நா.சபையில் பாலத்தீனக் கொடியை நிறுவுவதை இந்தியா ஆதரித்ததும், பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை தடுமாறுவதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து, 2017ம் ஆண்டு, இஸ்ரேலுக்குச் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை பெற்ற பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் டெல்அவிவ் கடற்கரையில் வெறுங் கால்களுடன் நடந்த புகைப்படங்கள் வைரலானது.
அடுத்த சில மாதங்களிலேயே இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். 2018ம் ஆண்டில், பாலத்தீன பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான 'கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலத்தீன' விருதைப் பாலஸ்தீன நிர்வாக அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரதமர் மோடிக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
பாலஸ்தீன மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளதாக உறுதியளித்த பிரதமர் மோடி, இறையாண்மை கொண்ட, சுதந்திரமான அமைதியான பாலஸ்தீனத்தை இந்தியா காண விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் 1200 அப்பாவி இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர்.
சுமார் 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 250 பேரைப் பணயக் கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைப்பிடித்து சென்றனர். இந்தப் பயங்கரத் தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே, கொஞ்சமும் தாமதிக்காமல் இந்தியப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலை அறிந்து பேரதிர்ச்சி அடைந்ததாகவும் இக்கட்டான இந்தச் சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதை அப்படியே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் மறுபதிவு செய்திருந்தது. தொடர்ந்து, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானும், லெபனானின் ஹிஸ்புல்லாவும், ஏமனில் ஹவுதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்தது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்திய இந்தியா, அதற்கான முன் முயற்சிகளையும் எடுத்துள்ளது.
குறிப்பாக, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் இராணுவம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, நிதானத்தையும் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படவும் வலியுறுத்தியிருந்தார். மேலும், உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று கூறிய பிரதமர் மோடி, பிராந்திய மோதல்களைத் தடுப்பதும், அனைத்து பணயக்கைதிகளையும் பாதுகாப்பாக விடுவிப்பதையும் உறுதி செய்வதும் மிக முக்கியம் என்றும் தெளிவுபடுத்தி இருந்தார்.
ஏற்கெனவே, பாலஸ்தீன மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிவாரணப் பணி நிறுவனத்துக்கு (UNRWA) 5 மில்லியன் டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது.16 டன்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட 70 டன் மனிதாபிமான உதவிகளை காசாவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
பொருள் உதவியைத் தவிர, நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காகப் பாலஸ்தீனத்தில் செயற்கை மூட்டு பொருத்துதல் முகாம்கள் உள்ளிட்ட சமூகநலப் பணிகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. இது தவிர காசா மக்களுக்குப் போர் நிறுத்தம் மற்றும் நிலையான மனிதாபிமான உதவியைச் செய்யும் இந்தியா, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதியான தீர்வை வலியுறுத்தி வருவதாக இந்திய நாடாளுமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டது.
இரு நாடுகளும் தீர்வை நோக்கி ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட 'நியூயார்க் பிரகடனத்தை இந்தியா ஆதரித்தது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சினையில், பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் அமைதியாக வாழக்கூடிய இறையாண்மை மற்றும் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவும் இரு நாடுகள் தீர்வை இந்தியா எப்போதும் ஆதரிப்பதாக ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, 2023ம் ஆண்டு ஏப்ரலில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில், இஸ்ரேல் 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், புதிய குடியேற்றங்களை நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள குடியேற்றங்களை விரிவுபடுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கும் ஆதரவாகவே இந்தியா வாக்களித்தது.
மேலும், ஐநா சபையில் பாலத்தீனத்தை உறுப்பினராக்க வேண்டும் என்றும் இந்தியா கூறிவருகிறது. கடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போது பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்த பிரதமர் மோடி, காசாவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் மனிதாபிமான அரசு அமைவதையும் வலியுறுத்தினார்.
ஐ.நா. சபை, ஜி20, பிரிக்ஸ் மற்றும் உலகளாவிய தெற்கு உள்ளிட்ட பல சர்வதேச மன்றங்களில் இந்தியா இஸ்ரேல், காசா இடையேயான மோதலை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியா 10 ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறது. உலக அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இந்தியா, மனிதாபிமானத்தை உறுதி செய்வதிலும் தீவிரமாகச் செயல்படுகிறது.
ராஜதந்திரத்துக்கு அப்பால் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் அமைதியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த ஒரு வலுவான தலைமையாக இந்தியா நிமிர்ந்து நிற்கிறது என்றே கூறலாம்.