For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

12:08 PM Jun 04, 2025 IST | Murugesan M
உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல்    சிதைக்கப்பட்ட ரஷ்ய  போர் விமானங்கள்

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன், சிலந்தி வலை என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஐந்து இராணுவ விமான தளங்களைக் குறிவைத்து நடத்திய மிகப்பெரிய ட்ரோன்  தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ விமானங்களை அழித்துள்ளது.  இந்த நடவடிக்கை எவ்வாறு செயல்படுத்தப்பட்டது ? இதற்கு ஏன் சிலந்தி வலை என்று பெயரிடப் பட்டது?  என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

உக்ரைன் நாட்டுப்புறக் கதை ஒன்றில்,  ஒரு விதவை தனது குழந்தைகளுடன் ஒரு பழைய குடிசையில் ஒரு பைன் மரத்துடன் வசித்து வந்தார்.  கிறிஸ்துமஸ் கொண்டாட அந்த ஏழைக் குடும்பத்துக்கு ஒரு மரம் இருந்தது. ஆனால் அதை அலங்கரிக்க எந்த அலங்காரப் பொருட்களும் அவர்களிடம் இல்லை. ஏக்கத்தோடு தங்கள் அலங்கரிக்கப் படாத  தங்கள் மரத்தை நினைத்துபடியே கண்ணீருடன் தூங்கச் சென்றனர்.

Advertisement

இரவு முழுவதும், ஏழைக் குடும்பத்தின் அழுகையைக் கேட்ட குடிசையில் இருந்த சிலந்திகள், மரத்தை அலங்கரிக்க அழகான, பட்டுப் போன்ற வலைகளை நெய்தன. அதிகாலையில், சூரியனின் கதிர்கள் சிலந்தி வலைகளில் பிரகாசித்து, அவற்றை வெள்ளி மற்றும் தங்கமாகக் கம்பிகளாக மாற்றி, கிறிஸ்துமஸ் மரத்தை அழகாக்கியது.

சிலந்திகள் தங்கள் வலைகளைப் பயன்படுத்தி வெறும் மரத்தை நம்பமுடியாத கலைப் படைப்பாக மாற்றிய பிறகு, விதவையும் அவளது குழந்தைகளும் உண்மையிலேயே தாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை உணர்ந்தனர். வாழ்க்கையின்  முன்னேறிச் செல்லும்போது, ​​தங்களிடம் இல்லாததைப் பற்றிக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே இருந்தவற்றிற்கு நன்றியைத் தெரிவிக்க அவர்கள் உறுதி பூண்டனர்.

Advertisement

இன்றும், உக்ரைன் நாட்டு மக்கள், தங்கள் கிறிஸ்துமஸ் மரங்களைச் சிலந்தி வலைகளால் ஆன  ஆபரணங்களால் அலங்கரிக்கின்றனர்.இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும் நம்புகின்றனர்.

இந்தப் பின்னணியில்,  உக்ரைனின் பாதுகாப்பு சேவை, ஆப்ரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் என்ற பெயரில்,மிகப்பெரிய தாக்குதலைத் துல்லியமாக நடத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இஸ்தான்புல்லில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒருநாள் முன்னதாக நடந்த இந்த தாக்குதலில், A -50 உளவு விமானங்கள், அதிநவீன Tu 22M3 மற்றும் Tu-95 அணுகுண்டு வீச்சு விமானங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், ரஷ்ய விமானப்படைக்கு சுமார் 7 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்புகள்  ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூர கிழக்கு மற்றும் கிழக்கு சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள இடங்கள் வரை நாடு முழுவதும் உள்ள ஐந்து இராணுவ விமான தளங்களில் உக்ரைனின் தாக்குதல்கள் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்  உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கையை முற்றிலும் அற்புதமான முடிவு என்றும் புத்திசாலியான தாக்குதல் என்றும்   பாராட்டியுள்ள உக்ரைன் அதிபர்   ஜெலென்ஸ்கி, சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுப் புத்தகங்களில் இந்த வெற்றி இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

வெவ்வேறு ரஷ்ய மாகாணங்களில் மூன்று வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து உக்ரைன் வீரர்கள் செயல்பட்டதாகவும், தாக்குதல்  தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் எல்லாம் ரஷ்யாவில் இருந்து வெளியேறிவிட்டனர் என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா மிகவும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பைக் கொண்டுள்ளது, எனவே ரஷ்யாவைத் தாக்குவது அவ்வளவு எளிதல்ல. எனவே,அதைத் தவிர்த்து விட்டு, ரஷ்யாவுக்குள் இருந்தே  ரஷ்யாவைத் தாக்க ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அது தான் ஸ்பைடர் வெப். இந்த நடவடிக்கையை உக்ரைனின் ரகசிய பாதுகாப்பு சேவை 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளது.

ரஷ்ய நெடுஞ்சாலை போக்குவரத்துடன் கலந்து செல்ல, ரஷ்யாவின் லாரிகள் போலிருக்கும்  லாரிகளைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்குள் ட்ரோன்களை உக்ரைன் கொண்டு சென்றுள்ளது.

வெட்டிய மரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும்  சரக்கு லாரிகள், மர கொட்டகைகளால் உருமாற்றம் செய்யப்பட்டன. மேலும் ரஷ்யச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல,  போலி ஆவணங்கள் பயன்படுத்தப் பட்டன.

இந்த லாரிகளில் ஒரு மர அறையில்,தயார் நிலையில் உள்ள  ட்ரோன்கள் வைக்கப்பட்டன. ட்ரோன்கள் வைக்கப்பட்ட  மரக் கொட்டகைகளின் கூரைகள்  ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப் பட்டன. உக்ரைனின் இந்த ட்ரோன்கள் ஒரே நேரத்தில்,ஐந்து முக்கிய  ரஷ்ய விமான தளங்களைத் தாக்க ஏவப்பட்டன.

ட்ரோன்கள் தொலைதூர ரஷ்ய விமானத் தளங்களை நோக்கி தன்னியக்கமாக பறக்க GPS வழிகாட்டுதல் அமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளன. உக்ரைனுக்கு நேட்டோ வழங்கிய செயற்கைக்கோள் தரவு மற்றும் உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு தரவுகளைப் பயன்படுத்தி, இந்த ட்ரோன்கள் இலக்குகளைத் துல்லியமாக அடையாளம் கண்டன.

சுமார்  1,000 கிலோமீட்டருக்கு மேல் பறந்துசென்ற ட்ரோன்கள், ரஷ்யாவின் இராணுவ விமான நிலையங்களைத்   தாக்கி அழித்துத் தீக்கிரையாக்கின. அதாவது வெறும் 430 ட்ரோன்கள் மூலம் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்யாவின்  இராணுவ விமானங்களைத் விமானங்களை அழித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நடக்கும் ரஷ்ய உக்ரைன் போரில், இதுவரை இல்லாத அதிநவீன ரகசிய இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகும். உக்ரைன் போரை விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜெலன்ஸ்கி,  போர் நிறுத்தத்துக்குத் தயாராக இருப்பதாகவும், ரஷ்யா தான் போரைத் தீவிரப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உக்ரைனிலும், உக்ரைனுக்கு அப்பாலும் ரஷ்யா இப்போது தாக்குதலுக்கான இலக்குகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சூரியனின் வெப்பநிலைக்கும் அதிகமாக 4000 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில், எல்லாவற்றையும் சாம்பலாக்கும் ஓரெஷ்னிக் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்த தயாராகி விட்டதாகவே தெரிகிறது.

ஓரெஷ்னிக் ஏவுகணை, மணிக்கு 13,000 கிமீ  வேகத்தில் பயணிக்க கூடியதாகும் .  ஏவப்பட்ட 15 நிமிடங்களுக்குள் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும். ஒரே நேரத்தில் வெவ்வேறு இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட பல போர்முனைகளைக் கொண்டதாகும்.
மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக குற்றஞ்சாட்டப்படும் ஜெலன்ஸ்கிக்கு  இந்த முறை புதினின் பதில் இரக்கமற்றதாகவே  இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement
Tags :
Advertisement