For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உதகையில் கோடை சீசனை குறிவைத்து கொள்ளை லாபம் - சிறப்பு தொகுப்பு!

06:02 AM Apr 02, 2025 IST | Murugesan M
உதகையில் கோடை சீசனை குறிவைத்து கொள்ளை லாபம்   சிறப்பு தொகுப்பு

உதகையில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளின் கட்டணமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வரும் உதகையில் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை எழில் நிறைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கமாக இருக்கிறது. கோடைக் காலத்திலும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கத் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் சுற்றுப்பயணிகளின் வருகையைப் பயன்படுத்தி அங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல் அறைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு முதல் சீசன், இரண்டாம் சீசன், மூன்றாம் சீசன் என மூன்று வகையான கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது அந்த நடைமுறைக்கு எதிராக உதகையில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் வாடகை கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பது சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

கடந்த மாதம் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணம்  எந்தவித முன்னறிவிப்புமின்றி தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே உதகையில் அமலில் இருக்கும் இ பாஸ் நடைமுறையால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் விடுதிகள் கட்டணத்தால் சுற்றுலாப்பயணிகள் எந்த வித பொருட்களையும் வாங்காமல் சென்றுவிடுவதும் அவர்களுக்குக் கூடுதல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்தினால் மட்டுமே உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்வதோடு, சுற்றுலாத் தொழிலையே நம்பியிருக்கும் வணிகர்களின் வாழ்வாதாரமும் சிறக்கும்.

Advertisement
Tags :
Advertisement