உத்திரமேரூர் அருகே உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா கோலாகலம்!
உத்திரமேரூர் அருகே உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு 18 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளுடன், சந்திரசேகர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மானாம்பதி கிராமத்தில் உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழாவை முன்னிட்டு சந்திரசேகர சுவாமி, உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி திருவீதி உலா வருவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு மாசி மக திருவிழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, அதிகாலை ஒரு மணியளவில் மானாம்பதி கூட்ரோட்டில் அமைந்துள்ள திருவிழா மண்டபத்தில் சந்திரசேகர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், மானாம்பதி கூட்டுச்சாலையில் காலை 4 மணியளவில் எழுந்தருளிய சந்திரசேகர சுவாமி மற்றும் 18 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளுக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில், இது தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.