For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலகக் கோப்பையை வென்ற "Women in Blue" : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

08:45 PM Nov 03, 2025 IST | Murugesan M
உலகக் கோப்பையை வென்ற  women in blue    47 வருட கனவு  நிறைவேறியது எப்படி

வரலாற்றில் முதல் முறையாக 47 வருட காத்திருப்புக்குப் பின் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை தட்டி தூக்கியிருக்கிறது இந்தியா.... விண்ணைப் பிளந்த வெற்றி முழக்கங்கள், வர்ண ஜாலங்கள் நிகழ்த்திய வாண வேடிக்கைகள் என இந்தியாவே இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எப்படிச் சாத்தியமானது உலகக் கோப்பைக் கனவு...? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

நவி மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது Women in Blue... இந்திய அணி வீராங்கனைகளின் உழைப்புக்கும் கோடிக் கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனைகளுக்கும் கிடைத்த மகுடமாகவே அமைந்துள்ளது இந்த உலகக் கோப்பை.

Advertisement

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உடனும் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவும் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் மோதியது. ஆனால் இரண்டு முறையும் தோல்வியையே தழுவியது.

1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் அந்தக் கனவுக் கோப்பையை ஒருமுறைகூட முத்தமிட முடியாமல் ஓய்வு பெற்றார் மித்தாலி ராஜ். இந்த நிலையில்தான் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் உலகக் கோப்பையை மடியில் சுமந்து வந்திருக்கிறார்கள் நம் வீராங்கனைகள்.

Advertisement

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடப்பு ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை நடைபெற்றது. இதில் இந்திய அணி கடந்து வந்த பாதை "திக் திக்" என இருந்ததே என்றே சொல்லலாம். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி துவக்க ஆட்டங்களான இலங்கை மற்றும் பாகிஸ்தான் உடனான போட்டிகளில் சுலபமான வெற்றியைப் பெற்றது.

ஆனாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடனான போட்டிகளில் தோல்வியைக் கண்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. நியூசிலாந்து அணியுடனான முக்கிய போட்டியில் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிரிதி மந்தனா அதிரடியால் வெற்றிப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இந்தியா.

உலகக் கோப்பைகளில் இந்திய அணிக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருப்பது ஆஸ்திரேலிய அணி. ஆனால் இந்த முறை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை அலறவிட்டது இந்திய அணி. 339 ரன்கள் என்ற இலக்கைச் சேஸ் செய்து, மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச இலக்கைச் சேஸ் செய்த ஒரே அணி என்ற பெருமையுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அனைத்துத் தடைகளையும் தாண்டி கனவு நிறைவேறுவதற்கான கடைசி படியில் நின்று கொண்டிருந்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டியில் சந்தித்தது. டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச இலக்கு இது என்பதுதான் ஹைலைட்.

துவக்க வீராங்கனையாகக் களமிறங்கிய சஃபாலி வர்மா அதிரடியாக ஆடி, 87 ரன்கள் விளாசினார். உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் அரைசதம் விளாசிய இளம் வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. அதே போல தீப்தி ஷர்மா, ஸ்மிரிதி மந்தனா என ஒவ்வொருவரின் ஆட்டமும் இந்தியாவுக்குப் பலம் சேர்த்தது.

299 இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் சதம் விளாசி களத்தில் நின்றார்... ஆனால் எதிரில் வந்த ஒவ்வொருவரும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சைத் தாக்கு பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களிலேயே, 246 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 52 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்று உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாகப் பெயரை பதிவு செய்தது.

இந்திய அணி வெற்றிப் பெற்ற தருணத்தில் வீராங்கனைகளும் பார்வையாளர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கொண்டாடிய விதமே சொல்லிவிடும், எத்தனை ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் கிடைத்த இந்த உலகக் கோப்பை என்று.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தங்க மகன் நீரஜ் சோப்ரா, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர்ச் சந்திரபாபு நாயுடு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகத் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பலரும் இந்திய மகளிர்க் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து மழைப் பொழிந்திருக்கின்றனர்.

2011 ஆம் ஆண்டு இந்திய ஆடவர் அணி மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பையை வென்றது. தற்போது இந்திய மகளிர் அணி நவி மும்பையில் முதல்முறையாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஐசிசியின் அனைத்து விதமான வடிவங்களிலும், இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை.

இந்த இளம்படையின் கனவு நிறைவேறியது என்பதோடு 140 கோடி இந்தியர்களின் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்திருக்கிறது... நாடே கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. கபில் தேவ், மகேந்திரச் சிங் தோனி வரிசையில் இனி ஹர்மன்பிரீத் கவுர் இடம் பெறுவார் என்பதும் நிதர்சனமான உண்மை.

Advertisement
Tags :
Advertisement