For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலகின் மகிழ்ச்சியான நாடு எது? : முதலிடத்தில் நீடிக்கும் பின்லாந்து - பட்டியலில் முன்னேறிய இந்தியா!

07:56 PM Mar 21, 2025 IST | Murugesan M
உலகின் மகிழ்ச்சியான நாடு எது     முதலிடத்தில் நீடிக்கும் பின்லாந்து   பட்டியலில் முன்னேறிய இந்தியா

உலக மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாகப் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. டென்மார்க்,ஐஸ்லாந்து,சுவீடன்,நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2012 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி, உலக  மகிழ்ச்சி தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. உலகமக்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சியை உணர வைப்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

Advertisement

உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு,உலக மகிழ்ச்சி அறிக்கையை  ஐநா சபை வெளியிடுவது வழக்கமாகும். இந்த அறிக்கை, 155 நாடுகளை அவற்றின் மகிழ்ச்சி நிலைகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.  உலக மகிழ்ச்சி அறிக்கை என்பது உலகளாவிய மகிழ்ச்சியின் நிலை குறித்த ஒரு மைல்கல் கணக்கெடுப்பாகும். முதல் உலக மகிழ்ச்சி அறிக்கை 2012 இல் வெளியிடப்பட்டது,

உலக மகிழ்ச்சி அறிக்கை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப் படுகிறது.  GALLUP  உலகக் கருத்துக்கணிப்பின் தரவுகளையே இந்த அறிக்கை  பயன்படுத்துகிறது.

Advertisement

சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் நிலை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி  என்ற ஆறு காரணிகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் மகிழ்ச்சி தீர்மானிக்கப் படுகிறது.

அக்கறை மற்றும் பகிர்வு என்ற கருப்பொருளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான, உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.  தனிநபர் மற்றும் தேசிய மகிழ்ச்சியின் முக்கிய காரணிகளாகக் கருணை, பச்சாதாபம் மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் 147 நாடுகளில் இந்த ஆண்டுக்கான மகிழ்ச்சி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தானமளித்தல் ,தன்னார்வத் தொண்டு செய்தல் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவுதல் ஆகிய மூன்று கருணைச் செயல்களின் அடிப்படையிலான நாடுகளின் தரவரிசை, அவற்றின் கலாச்சாரம் மற்றும் சமூக வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இயற்கை அழகு, வேலை-வாழ்க்கை சமநிலை, அரசின் மீதான மக்களின் நம்பிக்கை, உயர்தர சமூக சேவைகள் காரணமாகப் பின்லாந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து 8வது ஆண்டாக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.

டென்மார்க் 2வது இடத்திலும், ஐஸ்லாந்து 3வது இடத்திலும், ஸ்வீடன் 4வது இடத்திலும், நெதர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து, கோஸ்டாரிகா 6 வது இடத்திலும், நார்வே 7வது இடத்திலும், இஸ்ரேல் 8வது இடத்திலும், லக்சம்பர்க் 9வது இடத்திலும், மெக்சிகோ 10வது இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலில்,அமெரிக்காவும் இங்கிலாந்தும் தரவரிசையில் பெரும் சரிவைக் கண்டுள்ளன. இங்கிலாந்து 23 வது இடத்திலும், அமெரிக்கா 24வது இடத்திலும் உள்ளது. இதற்கு, அதிகரித்து வரும் சமூக தனிமை, அரசியல் பிளவுகள், அரசின்மீதான நம்பிக்கையின்மை ஆகியவை காரணங்களாகக் கூறப் பட்டுள்ளன.

கடந்தாண்டு, மகிழ்ச்சி பட்டியலில் 126வது இடத்திலிருந்த இந்தியா, சிறிது முன்னேறி இந்த ஆண்டு  118-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா சமூக ஆதரவில் சிறந்து விளங்குவதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இந்தியாவின் வலிமையான பண்பாடு மற்றும் பாரம்பரியத்தால் இந்தியா மகிழ்ச்சிப்பட்டியலில் முன்னேற்றம்  கண்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில், நேபாளம் 92-வது இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 109வது இடத்தையும், சீனா 68-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் வங்கதேசம் முறையே 133 மற்றும் 134வது இடத்தைப் பிடித்துள்ளன.

உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில்  பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களே,  ஆப்கானிஸ்தான் தரவரிசையில் பின்தங்கியிருப்பதற்குக்  காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து, (Sierra Leone )சியரா லியோன் மற்றும் லெபனான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது மகிழ்ச்சியற்ற நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் மோதல், வறுமை மற்றும் சமூக அமைதியின்மை உள்ளிட்ட குறிப்பிடத்தக்கச் சவால்களை எதிர்கொண்டுள்ளன.

Advertisement
Tags :
Advertisement