உலகின் மிகச்சிறிய PACE MAKER : மருத்துவ சாதனை!
உலகின் மிகச் சிறிய பேஸ்மேக்கரை (Illinois ) இல்லினாய்ஸின் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது அரிசியை விட மிகச் சிறியதான இந்த பேஸ் மேக்கர், தேவை முடிந்தவுடன் கரைத்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்கள் பேஸ் மேக்கர் பொறுத்தியுள்ளனர். பேஸ் மேக்கர் சிகிச்சை என்பது இதயத் துடிப்பு மிகக் குறைவாக உள்ளவர்களுக்குப் பொருத்தக் கூடிய ஒரு கருவியாகும். இது ஒரு சிறிய தீப்பட்டி அளவில் இருக்கும் பேட்டரியுடன் கூடிய மெட்டல் கருவியாகும். நோயாளியின் இதயத்துக்குத் தேவையான மின்சக்தியை தேவையான நேரத்தில் பேஸ் மேக்கர் வழங்கும். இதயத்தை மீண்டும் சரியாகத் துடிக்கும் படி செய்வதால் பேஸ் மேக்கர் இதய நோயாளிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாகும்.
சாதாரணமாக பேஸ் மேக்கர் பேட்டரியின் ஆயுள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பேட்டரி ஆயுள் குறையும் போது, சிறிய அறுவை சிகிச்சை மூலம் பழைய பேட்டரியை அகற்றிவிட்டு புதிய பேட்டரியைப் பொறுத்திக் கொள்ள முடியும்.
பல இதய நோயாளிகளுக்குக் குறுகிய கால இதயப் பிரச்சனைகளுக்காகத் தற்காலிகமாகவே பேஸ் மேக்கர் தேவைப்படுகிறது. வழக்கமாக, பொருத்தப் பட்ட பேஸ் மேக்கரை அகற்றுவதற்கு இரண்டாவது முறை இன்னொரு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த செயல்முறைக்கான செலவும் அதிகம், ஆபத்தும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலாக, நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங், ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் பேஸ் மேக்கர் வைத்துக் கொண்டார். இதயத் துடிப்பு சீரானதும், பேஸ் மேக்கரை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் போது அதிக உள் இரத்தபோக்கால் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இன்றைய உலகில், ஒரு சதவீத குழந்தைகள்,பிறக்கும் போதே இதயக் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். அவர்களுக்குப் பிறந்த உடனேயே இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
அதிலும், பெரும்பாலான குழந்தைகளுக்குத் தற்காலிகமாக இதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சைக்குப் பின், சுமார் 7 நாட்களில், அந்த குழந்தைகளின் இதயங்கள் சீராகத் துடிக்கின்றன.
வழக்கமாக, பொருத்தப்பட்ட பேஸ் மேக்கரை அகற்றுவதற்கு இரண்டாவது முறை இன்னொரு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த செயல்முறைக்கான செலவும் அதிகம், ஆபத்தும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், (Illinois ) இல்லினாய்ஸின் விஞ்ஞானிகள் இதய நோய் உள்ள குழந்தைகளுக்கான பேஸ் மேக்கரை உருவாக்கியுள்ளனர். ஒரு அரிசியின் அளவை விட மிகச் சிறியதாகும். 13.8-மில்லிகிராம் பேஸ் மேக்கர் 1.8 x 3.5 x 1 மில்லிமீட்டர் அளவு மட்டுமே கொண்டதாகும். மேலும், ஒரு சிரிஞ்சின் நுனிக்குள் பொருத்தக்கூடியதாகும். 3 மில்லிமீட்டருக்கும் குறைவான அகலத்தில், ஒரு ஊசி மூலம் இந்த பேஸ் மேக்கரை பொருத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த புதிய பேஸ் மேக்கரை அகற்றுவதற்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை. இனி தேவைப்படாது என்றவுடன் உடலில் இயற்கையாகவே கரையும் வகையில் இந்த பேஸ் மேக்கர் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த சாதனம் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இதயத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் மருத்துவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்மேக்கர்களை வைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதயத் துடிப்பு குறைபாடுகளுக்கு மட்டுமில்லாமல், நரம்புகள், எலும்புகள் மற்றும் உடல்வலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் இந்த புதிய, மிகச் சிறிய பேஸ் மேக்கரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.