உலகின் முதல் சைவ நகரம்!
குஜராத் மாநிலத்தின் பாலிதானா நகர் உலகின் முதல் சைவ நகரம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. அசைவ உணவுகள் முற்றிலும் தடைசெய்யப்பட்ட பாலிதானா நகர் குறித்தும், அங்கு இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் வடமேற்கில் குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலிதானா எனும் சிறிய நகரம் தான் இது. சத்ருஞ்சயா என்ற புனித மலையைச் சுற்றியிருக்கும் இந்த முக்கியமான நகரத்தில் 900-க்கும் அதிகமான கோயில்கள் தத்ரூபமாகக் கட்டப்பட்டுள்ளன.
பாலிதானா தனது சமண மத பாரம்பரியத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கும் நகரமாக அமைந்துள்ளது. சமண மதத்தின் அடிப்படைக் கொள்கையான அகிம்சையை முழுவதுமாக பின்பற்றப்படும் நகரமான பாலிதானா தற்போது இந்தியாவின் முதல் சைவ நகரமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்குப் பின்னணியில் நீண்ட நெடிய போராட்டங்களும் அடங்கியுள்ளன.
விலங்குகளை உணவிற்காகக் கொல்வதையும், அசைவ உணவுகள் விற்பனை செய்வதையும் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி 2014ம் ஆண்டு முதன்முதலில் சமணத் துறவிகள் மூலமாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சமணத்துறவிகள் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் விளைவாக பாலிதானாவில் விலங்குகள் வதைக்கு முழுமையான தடைவிதித்து குஜராத் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, அந்நகரத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் அதிரடியாக மூடப்பட்டன.
பாலிதானா வெறும் சைவ உணவு கொண்ட நகரமாக மட்டுமில்லாமல், சமண மதத்தின் அடிப்படைக் கொள்கையான அகிம்சையை முழுமையாக கடைப்பிடிக்கும் நகரமாகவும் உள்ளது. சமண மதத்தைச் சேர்ந்தவர்களின் புனிதயாத்திரை தலமாக இருந்த பாலிதானா தற்போது பல்வேறு மத நம்பிக்கை கொண்ட சுற்றுலாப்பயணிகளைக் கவரும் சிறந்த சுற்றுலாத்தளமாகவும் மாறியுள்ளது. சத்ருஞ்சயா மலையில் உள்ள அற்புதமான கட்டிடக் கலைகளும், நகரத்தின் தனித்துவமிக்க சைவ வாழ்க்கை முறையும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அத்தகைய சிறப்புமிக்க பாலிதானா நகரத்தில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் முட்டை, இறைச்சி உட்பட மொத்த அசைவு உணவுகளுக்கும் முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாலிதானாவில் புதியதாக ஏராளமான சைவ உணவகங்கள் திறக்கப்பட்டிருப்பதோடு புதுப்புது வகையிலான சுவையான சைவ உணவுகளும் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. பாலிதானாவை முன்மாதிரியாகப் பின்பற்றி குஜராத் மாநிலத்தில் உள்ள மற்ற நகரங்களான ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், அகமதாபாத் உள்ளிட்டவைகளும் இதே விதிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன