For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

07:45 PM Jun 20, 2025 IST | Murugesan M
எப்போது இனிக்கும் வாழ்க்கை    கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே கரும்பு விவசாயிகள்  930 நாட்களைக் கடந்தும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த தீவிரப்போராட்டத்தின் முழுப் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,  திருஆரூரான் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து போலீசார் அந்த விவசாயிகளைக் கைது செய்தனர்.

Advertisement

திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 212  கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வேண்டி உள்ளது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது. விவசாயிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க தனியார்  சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தற்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  சுமார் 2000 கோடி மதிப்புள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் அது தொடர்புடைய சொத்துக்களை கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் வெறும் 147 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.  ஆனால்  அதன்பிறகும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்ற குமுறல் எழுந்துள்ளது.

இதற்கிடையே கரும்பு விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் வாங்காத கடனுக்கு விவசாயிகள் சிவில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

Advertisement

தங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் தங்கள் பெயரில் வாங்கிய கடனை சம்பந்தப்பட்ட நிறுவனம் வட்டியுடன் செலுத்துமாறும் வலியுறுத்தி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி  பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதியிலிருந்து திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வருகையின் போது கருப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கரும்பு விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து தமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Advertisement
Tags :
Advertisement