ஏஐ தொழில்நுட்பம்: நிதியமைச்சக ஊழியர்களுக்கு தடை!
அரசின் ரகசிய தகவல் கசிவதை தடுக்கும் வகையில், நிதியமைச்சக ஊழியர்கள் ஏஐ பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சாட் ஜிபிடி மற்றும் சீனாவின் டீப் சீக் செயற்கை நுண்ணறிவு தளங்கள் உலகம் முழுவதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளன.
இதனால் அரசின் ரகசிய தகவல்கள் கசியும் அபாயம் எழுந்ததால், ஏஐ தளத்தை நிதியமைச்சக ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் ஏஐ பயன்பாட்டுக்கு கடிவாளம் போடப்பட்ட நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சகமும் அதன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
சாட் ஜிபிடி தயாரிப்பு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவன தலைவர் சாம் ஆல்ட்மேன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் சூழலில், நிதியமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
மேலும், நிதியமைச்சக ஊழியர்களுக்கு மட்டும்தான் ஏஐ பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவு மத்திய அரசின் பிற துறைகளுக்குப் பொருந்தாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.