For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய "அதிர்ஷ்டசாலி" - வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

07:55 PM Nov 04, 2025 IST | Murugesan M
ஏர் இந்தியா விபத்தில்  உயிர் தப்பிய  அதிர்ஷ்டசாலி     வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்  தப்பிய ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், பலரால் அதிர்ஷ்டசாலி எனக் கூறப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பேரழிவின் நினைவுகளும், சகோதரரின் இழப்பும் அவரைக் குடும்பத்திடம் இருந்து விலக்கித் தனிமைப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள அஹமதாபாத் அருகே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து 241 பயணிகளின் உயிரைப் பலிவாங்கியது. ஆனால் அந்த விபத்தில் சிக்கிய விஸ்வாஷ்குமார் ரமேஷ் என்பவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

Advertisement

லண்டனுக்குப் புறப்பட்ட AI 171 விமானம் தரையில் விழுந்து நொறுங்கியபோது, அதன் சிதைவுகளில் இருந்து விஸ்வாஷ்குமார் ரமேஷ் உயிருடன் வெளியே வந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்நிலையில், உலக மக்கள் விஸ்வாஷ்குமாரை "அதிர்ஷ்டசாலி" எனக் குறிப்பிட்டு கூறினாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அந்தப் பேரழிவின் நினைவுகள் அவருக்கு ஆறாவடுவாக மாறியுள்ளது.

விபத்தில் தனது சகோதரரை இழந்த விஸ்வாஷ்குமார், மீள முடியாத துயரில் மூழ்கி, தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். உடலளவில் ஏற்பட்ட காயங்கள் தன்னை வாகனம் ஓட்டவும், பணியாற்ற முடியாத நிலைக்கும் தள்ளியுள்ள நிலையில், தனது குடும்பத்தாரைப் பிரிந்து தனிமையில் தவித்து வருவதாக விஸ்வாஷ்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

குறிப்பாக விபத்திற்குப் பின் உடல் மற்றும் மன ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்ட விஸ்வாஷ்குமார் ரமேஷ், தனது மனைவி மற்றும் மகனுடன் பேசுவதைத் தவிர்த்து லெஸ்டரில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இரவு முழுவதும் விபத்தின் நினைவுகள் தன்னை வாட்டுவதாகத் தெரிவித்துள்ள விஸ்வாஷ்குமார், தனது ஒட்டுமொத்த குடும்பமும் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மன அழுத்த நோய் எனப்படும் PTSD மனநிலைக் கோளாறு விஸ்வாஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர் இதுவரை அதற்கு உரிய சிகிச்சைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையால் விஸ்வாஷ்குமாருடைய குடும்ப தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பக்க பலமாக இருந்து வரும் சமூக ஆர்வலர்  சஞ்சீவ் படேல் மற்றும் ராட் சீகர் ஆகியோர், ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து போதுமான உதவிகள் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியில் உள்ள விஸ்வாஷ்குமார் மற்றும் குடும்பத்தாரை, ஏர் இந்தியா நிறுவனத்தார் நேரில் சந்தித்துத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விஸ்வாஷ்குமாருக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது அவரது உடனடி தேவைகளைப் பூர்த்திசெய்ய போதுமானதாக இல்லை என்றும் விஸ்வாஷ்குமாரின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், ஏர் இந்தியா நிறுவனமோ தங்கள் உயர் அதிகாரிகள் பலமுறைப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும், விஸ்வாஷ்குமாரின் குடும்பத்தைச் சந்திக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

விஸ்வாஷ்குமார் ரமேஷின் வாழ்க்கை அவருக்கு உயிர்  பிழைக்க அதிர்ஷ்டத்தை வழங்கியிருந்தாலும், அன்புக்குரிய சகோதரரைப் பறித்து, மன அழுத்தத்தில் பொராடும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தக் குடும்பம் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப தேவையான மனநலம் மற்றும் பொருளாதார ஆதரவுகளை வழங்குவது மட்டுமே தீர்வாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Advertisement
Tags :
Advertisement