ஐபிஎல் கிரிக்கெட் - குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அபார வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிறைவு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் சென்னை அணி பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். தொடர்ந்து 18 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே சேர்த்து குஜராத் அணி தோல்வியை தழுவியது.
இதன் மூலம், 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது.
இதனிடையே டெல்லியில் நடைபெற்ற மற்றோரு ஆட்டத்தில் ஐதராபாத், கொல்கத்தா அணிகள் மோதின. இரு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில், கடைசி போட்டியில் விளையாடின.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கிளாசென் 105 ரன்களும், டிராவிஸ் ஹெட் 76 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 18 புள்ளி 4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.