For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஐபிஎல் கிரிக்கெட் - முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

06:56 AM Jun 04, 2025 IST | Ramamoorthy S
ஐபிஎல் கிரிக்கெட்   முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

18-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷதீப் மற்றும் ஜேமிசன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி வீரர்கள், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

Advertisement

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் வெற்றிக்காக போராடிய சஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி, 18 ஆண்டுகள் காத்திருப்பின் பலனாக ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி 759 ரன்களை குவித்த தமிழகத்தைச் சேர்ந்த குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன், 18-வது ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதை வென்றார். அதேபோல, இந்த ஐபிஎல் தொடரின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதும் சாய் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.

மற்றொரு குஜராத் அணி வீரரான பிரசீத் கிருஷ்ணா, இந்த ஐபிஎல் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை பெற்றார். இந்த தொடரில் 717 ரன்கள் எடுத்த மும்பை அணி வீரர் சூர்ய குமார் யாதவ் மிகுந்த மதிப்புமிக்க வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். மேலும், இந்த தொடருக்கான ஃபேர் பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

Advertisement
Tags :
Advertisement