ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!
நவி மும்பையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், விமானப் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. பிரதமர் மோடி விமான நிலையத்தைத் திறந்து வைக்கும் நிலையில், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் செயல்பட, கடந்த 30ம் தேதி அனுமதி வழங்கியிருக்கிறது மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம். தெற்கு மும்பையிலிருந்து தோராயமாக 37 கிலோ மீட்டர் தொலைவில், உல்வே என்ற பகுதியில், ஆயிரத்து 160 ஹெக்டேர் பரபரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது நவிமும்பை சர்வதேச விமான நிலையம்.
இங்கு ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்த முடியும். மும்பையின் தற்போதைய விமான நிலையத்தின் நெரிசலை குறைப்பதும், பிராந்திய போக்குவரத்தை மேம்படுத்துவதும் தான் நவி மும்பை விமான நிலையம் அமைப்பதற்கான அடிப்படை நோக்கம். இந்த விமான நிலையத்தின் பங்குகளில் 74 சதவிகிதம் அதானி குழுமத்திடமும், 25 சதவிகிதம் மகாராஷ்டிரா அரசிடமும் உள்ளன.
இதில் டெர்மினல்-1 ஆண்டுதோறும் 2 கோடி பயணிகளையும், 8 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டது... மூவாயிரத்து 700 மீட்டர் நீள ஓடுபாதையை கொண்டுள்ளதால், ஏர்பஸ் A380 போன்ற பெரிய விமானங்களை நிறுத்தும் திறனையும் பெற்றுள்ளது.
எதிர்கால விரிவாக்கத் திட்டங்களின்போது மூன்று கூடுதல் முனையங்களும், இரண்டாவது ஓடுபாதையும் அமைய உள்ளதால், 2036ம் ஆண்டுக்குள் 9 கோடி பயணிகளைக் கையாளும் நோக்கத்தை நவி மும்பை விமான நிலையம் பெறும். புகழ்பெற்ற ஜஹா ஹதீத் கட்டடக் கலைஞர்களால், வடிவமைக்கப்பட்டுள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலைய முனையம், தாமரை மலர்கள் விரிந்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட கட்டடக் கலையால் பயணிகளை ஈர்க்கிறது.
தாமரை இதழ்களை போன்ற 12 தூண்களும், 17 பிரமாண்ட நெடுவரிசை தூண்களும் விமான நிலையத்தின் கூரை விதானங்களை தாங்கியபடி நிற்கின்றன. நில அதிர்வுகள், புயல், அதிக எடையைத் தாங்கும் வகையில் விமான நிலையமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலான கட்டமைப்பு, பார்வையாளர்களை ஈர்ப்பதோடு, கட்டுமானத்தையும் முழுமை பெறச் செய்துள்ளது.. நவி மும்பை விமான நிலையத்தை எளிதில் அடைய அனைத்து வகை போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என உத்தேசிக்கப்படும் உயர்த்தப்பட்ட உல்வே கடற்கரை சாலையானது விமான நிலையத்திற்கு தடையில்லா போக்குவரத்தை வழங்கும். இந்தியாவில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யவும், ஆசியாவின் முன்னணி விமான போக்குவரத்தின் மையமாக மும்பையை நிலைநிறுத்துவதற்கும், நவி மும்பை விமான நிலையம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இந்திய விமான சேவை நிறுவனங்கள் மிகச்சிறந்த வளர்ச்சி கண்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் நடந்த சர்வதேச விமானப் பயணங்களில், 46 விழுக்காடு பயணங்கள், இந்தியாவில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2007-08ஆம் ஆண்டில் 381 விமானங்கள் இருந்த இந்திய நிறுவனங்களிடம், 2024ஆம் ஆண்டில் 800 விமானங்கள் உள்ளன.
உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை, 4 கோடியே 40 லட்சத்தில் இருந்து 16 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளது. சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 2 கோடியே 70 லட்சத்தில் இருந்து 7 கோடியே 20 லட்சமாக உயர்ந்துள்ளது.
மும்பையில் தற்போது செயல்படும் சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்துடன் இணைந்து இயங்கும் நவி மும்பை விமான நிலையம், சர்வதேச விமான சேவைகளை அதிக அளவில் வழங்கும். அந்த வகையில், 2030களில் மும்பையின் முக்கியமான மற்றும் மிகப்பெரிய விமான நிலையமாக, நவி மும்பை விமான நிலையம் உருப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.