கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்!
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவில், இலங்கை அரசால் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு, ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் மற்றும் ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஏற்றி வைக்கின்றனர்.
தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி சிலுவை பாதை திருப்பலியும், தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதனிடையே, கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் காலோன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு கச்சத்தீவிற்கு படகுகள் புறப்பட்டு சென்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் காலோன், முதலில் 7 விசைப்படகுகளில் பக்தர்கள் புறப்பட்டு சென்றதாகவும், திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ராமேஸ்வரத்தில் 2 மருத்துவ குழுவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் குழுவினரும் சென்றுள்ளதாக அவர் கூறினார்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியான தருணம் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியகருத்துகளை தற்போது காணலாம்...