கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!
தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டம் எனும் தலைப்பியில் சென்னையில் இந்திய கடலோர காவல்படை தனது ஒத்திகையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கடற்பரப்பில் தேங்கியிருக்கும் எண்ணெய் கழிவுகள் அகற்றுதல், கடலில் தீ விபத்து ஏற்படும் போது அதிலிருந்து மாலுமிகளை பாதுகாக்கும் நடைமுறை குறித்து ஒத்திகையில் விரிவாக விளக்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த 10 வருடங்களாகக் கடலில் எண்ணெய்க்கசிவு அதிகரித்து இருப்பதாகச் சர்வதேச கடல்சார் ஆராய்ச்சி கழகம் கணித்துள்ளது. கடல் பரப்பில் ஏற்படும் மாசு, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு வழி வகுப்பதாக உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா கடலோர காவல்படை, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தி வருகிறது.
27 வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டம் எனும் தலைப்பில் மாபெரும் ஒத்திகை பயிற்சியை சென்னை பகுதியில் மேற்கொண்டது இந்திய கடலோர காவல்படை. கடந்த அக்டோபர் 5ம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி ஒத்திகையில், மத்திய அமைச்சகம், மாநில கடலோர பாதுகாப்பு அமைப்புகள், முக்கிய துறைமுகங்கள், எண்ணெய் கையாளும் நிறுவனங்கள் மற்றும் கடல்சார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கடலோர காவல்படையின் “ஷௌர்யா” ரோந்து கப்பல் மூலமாகச் சென்னை துறைமுகத்தில் இருந்து 7 நாட்டிக்கல் மைல்கள் கடலுக்குள், கடலோர காவல்படையின் ஒத்திகையில், கடலின் சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு விளைவிக்கும் விதமான எண்ணெய் கசடுகள், எதிர்பாராத விதமாகக் கடலில் விழ நேர்ந்தால், அந்தக் கசடுகளை அகற்றும் செயல்முறைகள் விளக்கிக் காண்பிக்கப்பட்டன.
சட்டவிரோதமான செயல்கள் ஏதேனும் நிகழும்போது, அதனை இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சேதக் ஹெலிகாப்டர் பரிசோதனை செய்வது போன்று செய்து காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடலில் சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் எண்ணெய் கசிவு நிகழ்ந்த இடங்களில், பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, கடலின் மேற்பகுதியிலிருந்து எண்ணெய் முழுவதுமாக அகற்றப்படும் ஒத்திகை நடைபெற்றது.
கடற்பரப்பில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகள் அனைத்தும், அதனை உறிஞ்சும் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. கடல்பரப்பில் கொட்டியிருக்கும் எண்ணெய் படலங்கள், மற்ற இடங்களில் பரவாதவாறு ரப்பர் பூம் மூலமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அடுத்தபடியாகக் கடலில் பரவியுள்ள எண்ணெய் படலங்கள் குறித்து, இந்திய கடலோர காவல்படையின் டார்னியர் விமானம் மூலமாகக் கண்காணிக்கப்பட்டது.
மேலும் கடலில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து பிளார் கன் உதவியுடன் பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாகக் கப்பலை நெருங்கிய கடலோர காவல்படை கப்பல்கள், தண்ணீர் மற்றும் தீயணைப்பு போம்களை தெளித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
அதே போலத் தீப்பிடித்த கப்பலுக்கு உதவி அளிக்க வேண்டி, கப்பலில் சேதக் ஹெலிகாப்டர் மூலமாக ட்ரை கெமிக்கல் பவுடர் அதாவது டிசிபி பேக் விடப்பட்டு தீக்கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடலில் வானிலை மோசமான சூழலில் கப்பல்கள் அலையினால் தூக்கி வீசச் செய்யும். அப்போது கடலில் விழும் மாலுமிகளை காப்பாற்ற இந்திய கடலோர காவல்படை விரைந்து செயல்பட வேண்டியுள்ளது.
இந்தச் சூழலில் தான் அதிவேகமாகப் பயணிக்க வேண்டி, இந்திய கடலோர காவல்படையின் டார்னியர் விமானம், பாதிக்கப்பட்டோரை கவன ஈர்ப்பு புகை மூலமாகக் கண்டறிந்து, லைப் கிராப்ட் எனப்படும் பாதுகாப்பு உபகரணத்தை வீசியது. அதே போல இந்தச் சிறப்பு ஒத்திகையில் பங்கேற்பதற்காகவே, இந்திய விமானப்படைக்கு சொந்தமான சார்லி 1308 ஹெர்குலஸ் விமானம், மேற்கு வங்கத்தில் இருந்து வருகை புரிந்து, கடலில் பாதிப்பில் இருந்தவர்களுக்கு லைப் கிராப்ட் உபகரணத்தை வீசியது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது.
இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணி இந்தப் பயிற்சியினை பார்வையிட்டு மதிப்பீடு செய்தார். இந்திய கடலோர காவல்படை என்பது சுமார் 11,098 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியது.
இவற்றைப் பாதுகாப்பதும், கடல் வளங்களைக் காப்பதும் கடலோர காவல்படையின் பிரதான பொறுப்பு. இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமாக இருக்கும் இந்திய கடலோர காவல்படையின் இந்த மெய் சிலிர்க்க செய்யும், ஒத்திகை நிகழ்வுகள், அவ்வப்போது இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளின் கடல் பயணங்களை இனிமையாக்கி வருகின்றன.
கடல் பகுதிகளில் சூழும் ஒரு சொட்டு எண்ணெய் என்பது 1 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்குச் சமாமாகும். எனவே தான் அதனைக் கட்டுப்படுத்தும் மற்றும் அகற்றும் நிகழ்வுகளில் இந்தியா பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தப் பயிற்சி ஒத்திகை என்பது, சாதாரண மக்களுக்கும் சுற்றுசூழல் சீர்கேடுகளைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை அளிப்பதே நோக்கம் என இந்திய கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.