For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் - பரிதவிக்கும் மக்கள்!

06:10 PM Jun 23, 2025 IST | Murugesan M
கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள்   பரிதவிக்கும் மக்கள்

கட்டி முடிக்கப்பட்ட ஒன்றரை வருடத்தில் மேற்கூரை இடிந்து விழும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகள் அங்கு வசிக்கும் மக்களின் உயிர் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. குடியிருப்பை முழுமையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அடுத்த திருவான்மியூரில் உள்ள பெரியார் நகரில் இடிந்து விழும் நிலையிலிருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பை அகற்றிவிட்டு புதியதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு அண்மையில் திறக்கப்பட்டது.

Advertisement

62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில், குடியிருப்புகளின் மேற்கூரைகள் இடிந்து விழுவதால் அங்குக் குடியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். குடியிருப்பின் உண்மை நிலை குறித்து அறியத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய நேரடி கள ஆய்வில் அதன் நிலை மேலும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஒவ்வொரு முறை வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளாகும் போது ஆய்வு செய்வதையும், அதன் பின்னர்  தற்காலிக பூச்சு வேலையைப் பார்க்கும் அதிகாரிகளால் குடியிருப்புவாசிகள் தங்களின் வீட்டில் தங்கவே அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

Advertisement

குடிசைமாற்று வாரியத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனப் பெயர் மாற்றியதைக் கொண்டாடும் தமிழக அரசு, அக்குடியிருப்பைத் தரமாகக் கட்ட தவறிவிட்டதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்பில் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து வாழ வேண்டிய சூழலுக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, புளியந்தோப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இடிந்து விபத்துக்குள்ளான நிலையில், அது போல மேலும் ஒரு விபத்து நிகழும் முன்பாக பெரியார் நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை முழுமையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement