For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!

08:55 PM Jun 20, 2025 IST | Murugesan M
கனடா உளவுத்துறை ஒப்புதல்   காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாகக் கனடா மாறிவிட்டது என்று நீண்ட காலமாக இந்தியா கூறிவந்த குற்றச் சாட்டை அந்நாட்டு உளவுத்துறை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

The  Canadian Security Intelligence Service எனப்படும் கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவை அந்நாட்டின்  உயர்மட்ட உளவுத் துறை நிறுவனம் ஆகும். 2024 ஆம் ஆண்டுக்கான கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவையின் அறிக்கை, கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் இருப்பை உறுதி படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியாவைக் குறிவைத்து பயங்கர வாத தாக்குதல்களை நடத்தவும், நிதி திரட்டவும், திட்டமிடவும் காலிஸ்தான் பயங்கரவாதிகள், கனடா மண்ணை ஒரு தளமாகப் பயன்படுத்தி வருவதாக ,முதல்முறையாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

1980களில் இருந்து கனடாவில் காலிஸ்தான் அரசியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபடத்  தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், குறிப்பாக காலிஸ்தான் தனிநாடு என்ற பெயரில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக காலிஸ்தான் பயங்கர வாதிகள் செயல்பட்டு வந்தனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

அதற்காக வன்முறை வழிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் பின்பற்றி வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சிறிய குழுவாக இயங்கும் தனிநபர்களைக்  காலிஸ்தான் பயங்கர வாதிகள் என்று குறிப்பிட்டுள்ள கனடா உளவுத் துறை,  காலிஸ்தான் பயங்கரவாதிகள், கனடாவிலிருந்து கொண்டு, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா குருத்வாராவுக்கு வெளியே இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதியான நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும்  இடையிலான  உறவுகள் மோசமடைந்தன.

இந்தப் படுகொலையில் ஆறு இந்தியர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களைக் கூறிவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று   நிராகரித்த இந்தியா, இது குறித்து கனடா எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை என்றும் கூறியிருந்தது.

இதற்கிடையே, கனடாவில் உள்ள இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தனர். கனடாவின் பிராம்ப்டனில்  உள்ள இந்தக்கோயிலுக்கு வெளியே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்துக்களைத் தாக்கிய வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலானது. அதில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் கையில் காலிஸ்தான் கொடிகளுடன், கம்புகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களைத் தாக்குவது தெளிவாகத் தெரிந்தது.

அந்த சமயத்தில், தீபாவளி பண்டிகை விழாவில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ருடோ, முதல்முறையாக, கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர் என்று ஒப்புக்கொண்டார். இப்போது, கனடா உளவுத் துறை அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, கனடாவில் வெளிநாட்டுத் தலையீடு நடவடிக்கைகள் மூலம் காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் கனடா உளவுத்துறை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. சமீபத்தில் கனடாவில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டில்,கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா கனடா உறவுகள் "மிகவும் முக்கியமானவை" என்றும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து இருதரப்புக்கும் வெற்றி அளிக்கும் ஒத்துழைப்பை அடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவைப் புறக்கணித்து விட்டு கனடாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்பது பொருளாதார வல்லுனரான கனடா பிரதமர் மார்க் கார்னிக்கும் தெரியும் என்பதால் இந்தியாவின் தேவையை உணர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement