கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!
நவராத்திரி விழாவுக்காகக் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட சாமி விக்கிரகங்கள் மீண்டும் கன்னியாகுமரிக்கு திரும்பும் நிகழ்வில் இருமாநில காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காகக் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து முத்துக்குடைகளின் ஊர்வலத்துடன் கடந்த மாதம் புறப்பட்டது.
திருவனந்தபுரம் சென்றடைந்த சுவாமி விக்கிரகங்கள் கடந்த 23ஆம் தேதி நவராத்திரி பூஜைக்கு வைக்கப்பட்டு 9 நாட்கள் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், பாரம்பரிய பூஜைகள் முடிந்து சுவாமி விக்கிரகங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சுவாமி விக்கிரகங்ளுக்கு கன்னியாகுமரி எல்லை பகுதியான களியக்காவிளையில் நுழைந்தபோது இருமாநில காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
மேலும், வழிநெடுங்கிலும் உள்ள மக்கள் சுவாமி விக்கிரகங்களுக்குச் சிறப்புப் பூஜை நடத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.