For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கருகும் அமெரிக்க கல்லுாரி கனவு : ட்ரம்பின் செயலால் இந்திய மாணவர்களுக்குச் சிக்கல்!

07:50 PM Apr 10, 2025 IST | Murugesan M
கருகும் அமெரிக்க கல்லுாரி கனவு   ட்ரம்பின் செயலால் இந்திய மாணவர்களுக்குச் சிக்கல்

அமெரிக்க நாடாளுமன்றத்தில்,வெளிநாட்டு மாணவர்களுக்கான வேலை விசாவை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், அமெரிக்காவில் படிக்கும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அமெரிக்க கனவு இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். அமெரிக்காவில் கல்வி பயில ஆண்டுதோறும் எல்லா நாடுகளில் இருந்தும்  ஏராளமான மாணவர்கள் அமெரிக்காவுக்குச் செல்கின்றனர்.

Advertisement

கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள்   கல்வி பயின்று வருகின்றனர். மிக அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய மாணவர்களும், 2.77 லட்சம் சீன மாணவர்களும் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்கின்றனர். அமெரிக்காவில் சுமார் 43,149 தென்கொரிய மாணவர்கள்  படித்து வருகின்றனர்.

மேலும், கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர்.  அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, அந்நாட்டு அரசு சார்பில் F-1 மற்றும் M-1 விசா வழங்கப்படுகிறது.

Advertisement

இந்த விசாவில், மாணவர்களுக்குப்  படிப்பை முடிப்பதற்கு முன்பாகவோ அல்லது முடித்த பிறகோ விருப்ப நடைமுறை பயிற்சி (OPT)யின் அடிப்படையில் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது

சுருக்கமாக, விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) என்பது அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வழங்கும் வேலைவாய்ப்பு அங்கீகாரத்தின் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் குறிப்பிட்ட வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு 12 மாதங்கள் வரை தங்கள் துறையில் பணியாற்ற அனுமதிக்கிறது.

OPT என்பது, STEM படிப்புகள் முடித்த மாணவர்கள், பட்டப்படிப்புக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்காவில் வசிக்க அனுமதி அளிக்கிறது. இப்படி, OPT மூலம் பணி செய்ய அனுமதி பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே சமூகப் பாதுகாப்பு எண்ணுக்கு விண்ணப்பிக்க முடியும்.

கடந்த கல்வியாண்டில், 331,602 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். இதில்,  சுமார் 97,556 பேர் விருப்ப நடைமுறை பயிற்சியில் (OPT) இருந்தனர். எப்போதும் இல்லாத அளவுக்கு  41 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்முறை அனுபவத்தைப் பெறவும், நீண்ட கால வேலைவாய்ப்பு விசாக்களுக்கு மாறவும் இந்த OPT முறையையே  இந்திய மாணவர்கள் நம்பியுள்ளனர். ஏற்கெனவே, OPT நடைமுறையை ரத்து செய்வதற்கான அமெரிக்க அரசின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. ட்ரம்ப் தலைமையின் கீழ் மீண்டும், விருப்ப நடைமுறை பயிற்சியை ரத்து செய்யும் மசோதா கொண்டுவரப் படலாம் என்று கூறப் படுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாணவர் விசாவில் இருந்து வேலை விசாவுக்கு மாறுவதற்கான வழியே இல்லாமல் விருப்ப நடைமுறை பயிற்சி திடீரென முடிவடையும். அதனால்,வேறு வழியில்லாமல்,இந்திய மாணவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று  கூறப் படுகிறது.

எனவே, இந்திய மாணவர்கள், தங்களின் F-1 ,மற்றும் M -1 விசாவை,  H-1B விசாவாக மாற்ற அவசரமாக அவசரமாக விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். கூடுதலாக, மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்ற அச்சத்தில், பல இந்திய மாணவர்கள், கோடைக்காலத்தில்  இந்தியாவுக்கு வரும் பயணத்தையும்  ரத்து செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள லட்சக் கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. அதிக சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை இல்லாத நிலையில், கல்விக்காக வாங்கிய கடன் சுமையை எப்படி அடைப்பது என்ற கவலையும் இந்திய மாணவர்களுக்கு வந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement