கர்நாடகா : ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தில் தலையை மூடிய இளைஞர்!
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் அபராதத்தில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டுக்குப் பதில் பாத்திரத்தால் தலையை மூடிய இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் சாலை விபத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இதற்கு மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், ஹெல்மெட் அணியாமல் பயணித்தல் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.
இதனால் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதி உள்ளது.
நகரத்தின் முக்கிய இடங்களில் தானியங்கி சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த வகையிலான அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காகப் பெங்களூருவில் பாத்திரத்தால் தலையை மூடியபடி இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்துப் பலரும் கிண்டலாகப் பதிவிட்டு வரும் நிலையில், உயிர் காக்க ஹெல்மெட் அவசியம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.